/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் 6.14 லட்சம்: டோக்கன் வழங்கும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்
/
மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் 6.14 லட்சம்: டோக்கன் வழங்கும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்
மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் 6.14 லட்சம்: டோக்கன் வழங்கும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்
மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகள் 6.14 லட்சம்: டோக்கன் வழங்கும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்
ADDED : ஜன 08, 2024 05:22 AM

விழுப்புரம் மாவட்டத்தில், 6.14 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களில் 5.56 லட்சம் பேருக்கு மட்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்கப்படும். மற்ற கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருட்கள் மட்டும் வழங்கப்படும். இதற்கான டோக்கன் வழங்கும் பணியை நேற்று கலெக்டர் துவக்கி வைத்தார்.
தமிழக மக்கள், தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு, தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன், 1,000 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு மூலம் மகளிர் உரிமைத் தொகை பெற யார் தகுதியானவர்கள் என்பதற்கு விதிக்கப்பட்ட தகுதிகள் போன்று 1000 ரூபாயுடன் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கும் இந்த ஆண்டு அரசு புதியதாக ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி மத்திய, மாநில அரசு ஊழியர்கள், சர்க்கரை கார்டு வைத்திருப்பவர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து மற்ற கார்டுதாரர்கள் மட்டுமே 1000 ரூபாயுடன் பொங்கல் தொகுப்பு பொருட்கள் பெற தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களில் யார் தகுதியானவர்கள் என்பது குறித்த பட்டியல் சென்னை உணவு பொருட்கள் வழங்கல் துறை அலுவலகம் மூலம் விழுப்புரம் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலகத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளுக்கு நேற்று மாலை 3:00 மணி வரை கிடைக்கவில்லை. இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் தகுதியான ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெறவில்லை.
சில இடங்களில் மட்டும் தகுதி பட்டியல் வருவதற்கு முன்பே, ஏற்கனவே அரசு மூலம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1,000 ரூபாய் பெறும் பயனாளிகளின் விபரம் உள்ளதால், அந்த கார்டுதாரர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் தகுதியானவர்கள் பட்டியல் ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் வழங்கும் பணி நிறைவடைந்த பிறகுதான் இன்று 8ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி முழு வீச்சில் நடைபெறும் என கூட்டுறவுத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
விழுப்புரத்தில் நேற்று, கலெக்டர் பழனி, டோக்கன் வழங்கி தொடக்கி வைத்து கூறியதாவது:
மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 17 ஆயிரத்து 312 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அதில், அரிசி கார்டுதாரர்கள் 6 லட்சத்து 13 ஆயிரத்து 679ம், இலங்கைத் தமிழர் கார்டுதாரர்கள் 434 என மொத்தம் 6 லட்சத்து 14 ஆயிரத்து 113 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இதில், அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்களான 5 லட்சத்து 55 ஆயிரத்து 667 கார்டுதாரர்கள் மற்றும் 434 இலங்கைத் தமிழர் கார்டுதாரர்களுக்கு என மொத்தம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 101 கார்டுதாரர்களுக்கு மட்டும் பொங்கல் தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்கப்படும்.
நாளை 9ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு 10ம் தேதி துவங்கி 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை வழங்கும் பணி முழுமையாக முடிக்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் பழனி கூறினார்.
கூட்டுறவு சங்க இணைபதிவாளர் யசோதாதேவி உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
-நமது நிருபர்-