/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.8 லட்சத்தில் கட்டிய தரைப்பாலம் ஐந்தே மாதங்களில் உடைந்து சேதமான அவலம்
/
ரூ.8 லட்சத்தில் கட்டிய தரைப்பாலம் ஐந்தே மாதங்களில் உடைந்து சேதமான அவலம்
ரூ.8 லட்சத்தில் கட்டிய தரைப்பாலம் ஐந்தே மாதங்களில் உடைந்து சேதமான அவலம்
ரூ.8 லட்சத்தில் கட்டிய தரைப்பாலம் ஐந்தே மாதங்களில் உடைந்து சேதமான அவலம்
ADDED : அக் 24, 2025 03:23 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில், 5 மாதத்திற்கு முன் ரூ.8 லட்சம் மதிப்பில், கட்டிய தற்காலிக தரைப்பாலம், சாதாரண மழைக்கே உடைந்து போன சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனம், கிடங்கல்1 ஏரியின் உபரிநீர், நாகலாபுரம் பகுதியில் செல்லும் வாய்க்கால் வழியாக மரக்காணம் கடலில் சென்று கலக்கிறது.
நாகலாபுரம் பகுதியில் உள்ள வாய்க்கால் குறுக்கே ஒரு தரைப்பாலம் இருந்தது. கடந்தாண்டு 'பெஞ்சல்' புயலின்போது, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அந்த பாலம் முற்றிலும் உடைந்து சேதமடைந்தது.
தொடர்ந்து, அங்கு தற்காலிக தரைப்பாலம் அமைக்க நகராட்சியில் 8 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த மே 5ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு மெகா சைஸ் 'பைப்கள்' புதைக்கப்பட்டு, மண் கொட்டி சரி செய்யப்பட்டது. மேலும், பைப்களின் இருபுறங்களிலும் 'ஹாலோ பிளாக்' கற்களால் தடுப்பு அமைத்து, மேல்பகுதியில் ஜல்லி கற்கள் மற்றும் சிமெண்ட் கலவை கொட்டி சாலை அமைத்து தற்காலிக தரைப்பாலம் அமைத்தனர்.
திண்டிவனம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் கிடங்கல் ஏரி நிரம்பி அதிலிருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை நாகலாபுரம் தரைப்பாலம் திடீரென உள் வாங்கி உடைந்து சேதமடைந்தது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்திற்கு தடை செய்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பாலத்தின் வழியாக செல்லும் சாலையை பயன்படுத்த முடியாமல் இந்திரா நகர், நல்லியக்கோடன் நகர் பகுதி மக்கள் மயிலம் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும், சிலர் ஆபத்தை உணராமல் உடைந்த பாலத்தின் வழியாக பயணம் செய்து வருகின்றனர்.
தரைப்பாலம் அமைத்து ஐந்தே மாதத்தில் உடைந்து சேதமடைந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.

