/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு... தீர்வு; செஞ்சி கமிட்டியில் ரூ.2 கோடியில் கூடம்
/
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு... தீர்வு; செஞ்சி கமிட்டியில் ரூ.2 கோடியில் கூடம்
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு... தீர்வு; செஞ்சி கமிட்டியில் ரூ.2 கோடியில் கூடம்
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு... தீர்வு; செஞ்சி கமிட்டியில் ரூ.2 கோடியில் கூடம்
ADDED : ஜூன் 25, 2024 07:25 AM
செஞ்சியில் உள்ள மார்க்கெட் கமிட்டி தமிழகத்திலேயே அதிக நெல் வரும் கமிட்டியாக உள்ளது. கடந்த 1978ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த மார்க்கெட் கமிட்டியில் நெல்லுக்கு விலை அதிகம் கிடைப்பதால் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நெல் கொண்டு வருகின்றனர். சீசன் நேரத்தில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை விற்பனைக்கு வரும்.
இந்த நெல் மூட்டைகளை இறக்கி வைத்து ஏலம் நடத்த மார்க்கெட் கமிட்டியில் போதிய மேற்கூரை உள்ள ஏல களங்கள் இல்லை. இதனால் நெல் அதிகம் வரும் நாட்களில் திறந்த வெளி ஏல களங்களில் நெல் மூட்டைகளை வைத்து ஏலம் நடத்தப்படுகிறது.
மழை வரும் நாட்களில் திறந்த வெளியில் உள்ள நெல் மூட்டைகள் நனைவது 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. இதனால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகி வந்தனர்.
கடந்த மே மாதம் மழையின் போது ஒரே நாளில் 12 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்த சேதமானது. தமிழகத்தில் உள்ள அரசியில் கட்சி தலைவர்களும், விவசாய சங்கத்தினரும் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் முதல்வர் ஸ்டாலின் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர் செல்வத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து கடந்த 22ம் தேதி சட்டசபையில் நடந்த வேளாண்மைத் துறை மானிய கோரிக்கையின் போது வேளாண்மைத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், செஞ்சி, போளூர், விருத்தாசலம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் ஒழுங்குமுறை கூடங்களில் தலா 2 கோடி மதிப்பில் 15 ஆயிரம் சதுரடியில் பாதுகாப்பு கூடங்கள் கட்டப்படும் என அறிவித்தார்.
இதன் மூலம் செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் பல ஆண்டுகளாக நிலவி வந்த பெரும் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.