/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபோதையில் காரை ஓட்டிய இளைஞர்களால் விபத்து
/
மதுபோதையில் காரை ஓட்டிய இளைஞர்களால் விபத்து
ADDED : ஜூலை 09, 2025 01:41 AM
விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே மதுபோதையில் காரை ஓட்டிய இளைஞர்கள், மற்றொரு கார் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மரக்காணம் அருகே கடப்பாக்கத்தை சேர்ந்தவர் ஆனந்தவேலு, 38; மெக்கானிக். இவர் வாடிக்கையாளர் ஒருவரின் காரை பழுது நீக்கி, புதுச்சேரியில் கொடுக்க நண்பர் கணேஷ் என்பவரோடு சென்றார். இந்த காரை ஆனந்தவேலு என்பவர் ஓட்டி சென்றார்.
பொம்மையார்பாளையம் இ.சி.ஆரில் இவரது கார் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த கார் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஆனந்தவேலின் கார் இடதுபுறத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இதில் ஆனந்தவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களின் வாகனத்தில் மோதிய கார், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.
விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிய வேலுார் மாவட்டம், காட்பாடி தோப்பு தெருவை சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன்,24; முன் இருக்கையில் அமர்ந்திருந்த காட்பாடி, குமாரமங்கலத்தை சேர்ந்த தேவரத்தினம் மகன் நித்திஷ்,19; பின்னால் அமர்ந்திருந்த, 4 பேர் உட்பட மொத்தம் 6 பேரை அங்கிருந்த பொதுமக்கள் சராமரியாக தாக்கினர். அவர்கள் மக்களிடம் இருந்து தப்பியோடினர்.
கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், விபத்து ஏற்படுத்திய காரில் வந்தவர்கள், புதுச்சேரிக்கு வந்து காலாப்பட்டு பகுதியில் அறை எடுத்து தங்கியதும், புதுச்சேரி கடற்கரைக்கு செல்ல மதுபானம் அருந்தி காரை வேகமாக ஓட்டியதும் தெரியவந்தது. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

