/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாகலாபுரம் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் தொடரும் விபத்துகள்
/
நாகலாபுரம் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் தொடரும் விபத்துகள்
நாகலாபுரம் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் தொடரும் விபத்துகள்
நாகலாபுரம் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் தொடரும் விபத்துகள்
ADDED : பிப் 13, 2024 05:24 AM

திண்டிவனம் நாகலாபுரம் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் பலர் விபத்தில் சிக்கி கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாவது தொடர்கிறது.
திண்டிவனம் நகர மைய பகுதியில் நாகலாபுரம் உள்ளது. இப்பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் தெரு அருகே கிடங்கல் ஏரியின் உபரி நீர் செல்லும் பிரதான வெள்ளவாரி கால்வாய் உள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு, திண்டிவனத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, பாலம் அடித்து சென்றது. இதன் பிறகு அந்த இடத்தில் தற்காலிகமாக சிமென்ட் பைப் வைத்து, மண்ணைக்கொட்டி வாகனம் செல்வதற்காக பாலம் அமைத்தனர். பாலத்தின் இரண்டு பக்கமும் தடுப்புச்சுவர் இல்லாதாதல் பலர் விபத்தில் சிக்கினர்.
பாலத்தை சீரமைக்க வேண்டும் என அர்ஜூனன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை கோரிக்கை வைத்தும் புதியதாக பாலம் கட்டப்படவில்லை.
தடுப்புச்சுவர் இல்லாத பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் வருவோர் பலர் கால்வாயில் விழுவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சவுக்கு கழியை கட்டி வைத்திருந்தனர். தற்போது அந்த கட்டையும் இல்லாமல் திறந்த வெளியாக உள்ளது.
நேற்று முன்தினம் வயதான இருவர், பைக்கில் வந்தபோது பாலத்திலிருந்து சருக்கி கால்வாயில் விழுந்து காயமடைந்தனர். உடன் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவர்கள் பாலத்தில் விழுந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இதேபோல் கடந்த இரண்டு மாதத்திற்கு முன், பள்ளி சிறுமியை அவரது தாயார் அழைத்து வந்த போது, இருவரும் உள்ளே விழுந்து, லேசான காயத்துடன் தப்பினர்.
பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலத்தின் இரு பக்கமும் தடுப்புகளை ஏற்படுத்தி, உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.