நிலமோசடி பதிவு அதிகரிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு: என்.ஓ.சி., பெற்று பதிவு செய்ய அறிவுறுத்தல்
நிலமோசடி பதிவு அதிகரிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு: என்.ஓ.சி., பெற்று பதிவு செய்ய அறிவுறுத்தல்
UPDATED : ஆக 28, 2026 04:58 PM
ADDED : ஆக 28, 2026 03:40 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நில மோசடி அதிகரிப்பதால் விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால், மோசடி பதிவுகளைத் தடுக்க என்.ஓ.சி., பெற்று பதிவு செய்ய பதிவுத்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். விழுப்புரத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
செஞ்சி அருகே சங்கராபரணி ஆற்றில் கட்டிய தடுப்பணையின் இரு கரைப்பகுதி சேதமடைந்துள்ளதால் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. இந்தாண்டு போதிய பருவமழை இல்லாததால் சொட்டு நீர் பாசனம் போன்ற மானிய திட்டங்களை வழங்க வேண்டும். நெல், வேர்க்கடலை காய்கறி விதைகளை தரமாக வழங்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில், தொடர்ந்து நில மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நிலத்தை வாங்கும் பலர், நில விற்பனையின்போது அருகே உள்ள சிறு விவசாயிகளின் நிலத்தையும் முறைகேடாக பத்திரப் பதிவு செய்துகொள்வதும், ஆக்கிரமிப்பதும் தொடர்கிறது. இந்த முறைகேடுகளைத் தடுக்க பதிவுத்துறைக்கு அறிவுரை வழங்க வேண்டும். விவசாய நிலங்களை கிரயம் செய்யும்போது அந்த பகுதி தாசில்தாரிடம் என்.ஓ.சி., பெற்று பதிவு செய்யும் விதியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒலக்கூர் ஏரி வாய்க்கால் துார் வாரப்படாமல் உள்ளது. எங்களையே சீர்படுத்திக் கொள்ளுங்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர். விவசாய நிலத்தை மண் கொட்டி சீர்படுத்துவதற்கு அரசு தரப்பில் மண் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சொந்த நிலத்திலிருந்து மண் அடித்தாலும் அதிகாரிகள் தடுக்கின்றனர். இதற்கு உரிய அனுமதி தர வேண்டும்.
விவசாய மின் இணைப்புக்காக பலர் பதிவு செய்து நீண்ட காலம் காத்திருக்கின்றனர். மின் உபகரணங்கள் போன்றவை இல்லாததால் மின் இணைப்பு வழங்காமல் உள்ளனர்.
விக்கிரவாண்டி அருகே சங்கராபரணி ஆற்றில் இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் திருட்டு நடக்கிறது. கூட்டுறவு வங்கியில், முறையாக கடன் பெற்று திருப்பி செலுத்திய விவசாயிகளுக்குக் கூட கடன் வழங்காமல் உள்ளனர். விக்கிரவாண்டி, மேலக்கொந்தை ஏரிகளை துார்வார வேண்டும், அத்தியூர் திருக்கை ஏரி உடைப்பை சீர்படுத்த வேண்டும்.
மரக்காணம் அருகே ஏரியை ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டுவதைத் தடுக்க வேண்டும். மாவட்டத்தில் பல இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் மின் விபத்து நடக்கிறது. விவசாய மின் ஒயர்கள், மின் சாதனங்கள் திருடுவதும் வாடிக்கையாக உள்ளது. விழுப்புரம், மரக்காணம், திண்டிவனம் பகுதியில் திருட்டுகள் நடக்கிறது.
வங்கிகளில் பயிர்க் கடன் கேட்கும்போது என்.ஓ.சி., வாங்க வேண்டும் என அலைகழிக்கின்றனர். பட்டா மாற்றப் பணிகளை முடிக்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
தேசிய வங்கிகளில் நான்கு சதவீத வட்டியில் நகைக் கடன் வழங்குவதில்லை, ஏரிகளில் கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளதால் விவசாயம் பாதிக்கிறது. உரக்கடைகளில் பயோ ஓரம் என்ற பெயரில் முறைகேடாக உரங்களை விற்று, விவசாயிகளை ஏமாற்றுகின்றனர். இவ்வாறு விவசாயிகள் குறைகள் குறித்து பேசினர்.
கோரிக்கைகள் மீதான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
