நுாறுநாள் வேலை திட்டத்தில் இலக்கை தாண்டி சாதனை ! மாவட்டத்தில் 5.59 லட்சம் 'ஜாப் கார்டு' விநியோகம்
நுாறுநாள் வேலை திட்டத்தில் இலக்கை தாண்டி சாதனை ! மாவட்டத்தில் 5.59 லட்சம் 'ஜாப் கார்டு' விநியோகம்
UPDATED : ஜூலை 07, 2026 06:58 PM
ADDED : ஜூலை 07, 2026 06:52 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நுாறு நாள் வேலை திட்டத்தில், கடந்த 2025-26ம் நிதி ஆண்டில் 81 லட்சம் மனித சக்தி நாட்கள் திட்டமிடப்பட்டது. இந்த இலக்கைத் தாண்டி 89 லட்சத்து 73 ஆயிரத்து 767 மனித சக்தி நாட்கள் (110.79 சதவீதம்) உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் துவங்கப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில், வேலை அட்டை பெறுவதற்கான உரிமை, வேலை கோரிய 15 தினங்களுக்குள் வேலை, வேலையில்லாபடி, தேவையான பணிகளைத் தேர்ந்தெடுத்தல், 5 கி.மீ. தொலைவிற்குள் வேலை பெறுதல் மற்றும் பணித்தளத்தில் அடிப்படை வசதிகள் பெறுவது உள்ளிட்ட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி, தொழிலாளர்கள் ஊதியத்தை ஆதார் எண் அடிப்படையில், அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் முகையூர், திருவெண்ணெய்நல்லுார், காணை, கோலியனுார், கண்டமங்கலம், விக்கிரவாண்டி, ஒலக்கூர், மயிலம், மரக்காணம், வானுார், செஞ்சி, வல்லம், மேல்மலையனுார் ஆகிய 13 ஒன்றியங்களில் நுாறு நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாவட்டத்தில், 2026-27ம் ஆண்டில் தொடர்ந்து வேலை செய்யும் 4 லட்சத்து 43 ஆயிரத்து 846 தொழிலாளர்களில், 4 லட்சத்து 43 ஆயிரத்து 806 தொழிலாளர்களின் கணக்கில், ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சிகளில், வேலை அட்டை வழங்க கோரி 4 லட்சத்து 21 ஆயிரத்து 301 குடும்பத்தினர் பதிவு செய்தனர். இதையடுத்து, 5 லட்சத்து 59 ஆயிரத்து 292 பயனாளிகளுக்கு தனி நபர் வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றிய பகுதிகளில் 842 பணிகளை, நடப்பு நிதியாண்டில், முதல் 3 மாதங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இவற்றில், 15 பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. முதல் காலாண்டில் நுாறு நாள் வேலைத் திட்டத்தின் படி, 36 கோடியே 59 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
