/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை! விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?
/
விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை! விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?
விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை! விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?
விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை! விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?
ADDED : மார் 30, 2025 11:23 PM

விழுப்புரம்; விழுப்புரத்தில் பழாகி வரும் நகராட்சி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் நகரின் மையத்தில், ரயில் நிலையத்தையொட்டி நகராட்சி விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது.நுாறாண்டை கடந்த காமராஜ் நகராட்சி மேல்நிலை பள்ளியுடன் இணைந்திருந்த இந்த பெரிய மைதானம், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.
இந்த மைதானம் ஆரம்ப காலங்களில் விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவர்களின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமாக விளங்கி வந்தது. தடகளம் முதல் குழு போட்டிகள் வரை நீண்டகாலமாக விளையாட்டு துறை சார்பிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
மேலும், ஓட்டப் பந்தயம் முதல் கிரிக்கெட் போட்டிகள் வரை மாணவர்கள் இங்கு விளையாடும் அளவிற்கு மிகப்பெரிய அளவிலும், சுற்றிலும் காம்பவுண்டு சுவர் வசதியுடன், நகரின் விளையாட்டு மைதானம் என்ற அடையாளமாக விளங்கி வந்தது.
இதற்கிடையே, ஆண்டுதோறும் அந்த மைதானத்தில், சர்க்கஸ், பொருட்காட்சி, கண்காட்சி அரங்குகளுக்கும் வாடகை விடப்பட்டு, நகராட்சிக்கு வருவாயும், பொது மக்களுக்கு பொழுது போக்கு அம்சங்களும் கிடைத்து வந்தது. அவ்வப்போது, அனைத்து அரசியல் கட்சியனரின் மாநாடுகள், பொதுக்கூட்டங்களும் நடந்து வந்தன.
அடிக்கடி, கண்காட்சி அரங்குகள், கட்சி கூட்டங்கள் ஆக்கிரமித்ததால், விளையாட்டு போட்டிகள் நடத்தாமல், அந்த விளையாட்டு மைதானம், நகராட்சி திடலாக மாறியது.
அதனையும் சரியாக பயன்படுத்தாமல், முறையாக பராமரிக்காமல் விட்டதால், தற்போது விளையாட்டு மைதானமும் இன்றி, நகராட்சி திடலாகவும் இல்லாமல் குப்பைகள் கொட்டும் மையமாகவும், சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாகவும் மாறியுள்ளது.
விளையாட்டுகள் நடந்த வரை பயன்பாட்டில் இருந்ததால், மைதானம் நல்லபடியாக இருந்தது. தாழ்வாக உள்ள இந்த மைதானத்தில், மழைக்காலங்களில் மழை வெள்ள நீர் குளம் போல் தேங்குவதும், பிற காலங்களில், கழிவு நீர் தேங்கியும், குப்பைகள் கொட்டியும் வீணாகிறது. மைதானத்தின் ஓரமாக, ஒருபுறம் குப்பை கிடங்கை கட்டி வீணடித்தனர். ஒருபுறம் குடிநீர் டேங்க் கீழ் பகுதியில் குப்பைகள் கொட்டி வைத்துள்ளனர்.
இந்த மைதானத்தின் ஓரமாக அரசு இசை பள்ளி, நகராட்சி மேல்நிலை பள்ளி, குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம், ரயில் நிலையம் போன்றவை அமைந்துள்ளன.
ஆனால், எப்போதும் குப்பைகள் கொட்டி துர்நாற்றம் வீசுவதும், கழிவு நீர், மழைநீர் தேங்கியும், மிகப்பெரிய மைதானம் வீணாகி வருகிறது. இதனை மீண்டும் நல்லதொரு விளையாட்டு மைதானமாக பயன்பாட்டுக்கு கொண்டுவர, நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.