மக்களின் கோரிக்கைகள் மீது தாமதமின்றி... நடவடிக்கை ! அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை
மக்களின் கோரிக்கைகள் மீது தாமதமின்றி... நடவடிக்கை ! அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை
UPDATED : ஜூன் 23, 2026 10:14 PM
ADDED : ஜூன் 23, 2026 10:10 PM

விழுப்புரம்: 'பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது அலுவலர்கள் தாமதமின்றி, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கலெக்டர் பேசினார்.
விழுப்புரம் மாவட்ட அளவிலான, அனைத்து துறை செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஆனந்த் குமார் சிங் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியதாவது:
தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது அலுவலர்கள் தாமதமின்றி, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு, போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக கண்காணிக்கப்பட வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பான நிவாரண நடவடிக்கைகள் வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீட்டுமனைப்பட்டா வழங்குதல், மாணவ, மாணவிகளின் விடுதி கட்டடங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது தீர்வு காண்பதுடன், டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு, உழவர் சந்தைகள் மற்றும் மின்னணு தேசிய வேளாண் சந்தை செயல்பாடுகள் ஆகியவற்றையும் கண்காணித்திட வேண்டும்.
கால்நடை பராமரிப்புத்துறை மூலம் பால் வளத்தைப் பெருக்கிட வேண்டும். மீன்வளத்துறை சார்பில் தெருநாய்களின் இனப்பெருக்க கட்டுப்பாடு மற்றும் வெறிநோய் தடுப்பூசி திட்டத்தின்படி, மாவட்ட கண்காணிப்பு குழு மூலம் தெருநாய்களுக்கு மேற்கொள்ளப்படும் கருத்தடை விபரங்கள் குறித்தும், கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்கள், தீவனக்கிடங்குகள், உள்நாட்டு மீன்வள வளர்ச்சி தொடர்பாகவும் ஆய்வு செய்ய வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் செயல்பாடுகளையும், பொது விநியோகத் திட்டம் குறித்தும், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதை விரிவுபடுத்தவும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையினர் தாய், சேய் இறப்பு விகிதம், போதை மறுவாழ்வு மையங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிட வேண்டும்.
மேலும், உயர்கல்வித்துறையில் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்கள் 100 சதவீதம் உயர்கல்வியில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும். கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக்கள் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் குறித்தும், சிங்கப்பெண் திட்டம் குறித்தும் அலுவலர்கள் ஆய்வு செய்திட வேண்டும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினர், அனைவருக்கும் குடிநீர் வழங்கவும், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவைற்றை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள், இணைய வழி சான்றிதழ்கள் குறித்தும், சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும், வீட்டுமனைப்பட்டா, இணையவழி பட்டா மாறுதல் , பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையினர் அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வழங்குதல், சாலை வசதிகள், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் குறித்து கண்காணித்திட வேண்டும்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என அனைத்து துறை செயல்பாடுகள் குறித்தும் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி ஆலோசனை வழங்கிட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
