மேல்மலையனுாரில் கூடுதல் வசதிகள்... தேவை: பக்தர்கள் சாலையோரம் துாங்கும் அவலம்
மேல்மலையனுாரில் கூடுதல் வசதிகள்... தேவை: பக்தர்கள் சாலையோரம் துாங்கும் அவலம்
ADDED : ஆக 17, 2026 04:11 AM

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு போதிய வசதியில்லாமல் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பின்றி சாலையோரம் துாங்கும் அவலம் உள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்களில் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அமாவாசை, மாசி தேர் திருவிழா, ஆடி வெள்ளி போன்ற நாட்களில் லட்சக்கணக்கில் கூடுகின்றனர்.
ஆடி அமாவாசை தினமான கடந்த 12ம் தேதி அதிகாலை முதல் கூட்டம் அலை மோதியது. நள்ளிரவு வரை 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
பக்தர்கள் அதிகம் குவிந்ததால் போதிய கழிவறை இல்லை. இருக்கும் கழிவறைகளில் நவீன வசதிகள் இல்லை. அத்துடன் சுத்தமாகவும் பராமரிகாததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதனால், பெண்கள் முதற்கொண்டு பாதுகாப்பு இல்லாத ஏரி, வயல்வெளிகளை தேடிச் சென்றனர்.
எனவே, கோவில் அருகில் மட்டுமின்றி கோவிலுக்கு வரும் வழியில் முக்கிய சாலைகளில் கூடுதலாக நவீன கழிவறைகள் அமைத்து, சுத்தம் செய்ய தனி பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
பகல் முழுதும் வெயில் வாட்டி எடுத்த நிலையில் நீண்ட நேரம் வரிசையில் நின்ற பக்தர்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்கவில்லை. மாலை 5:00 மணியில் இருந்து ஊஞ்சல் மண்டபம் முன் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர். இவர்கள் நள்ளிரவு 12:00 மணி வரை காத்திருந்தனர். இவர்களுக்கு போதிய குடிநீர் வழங்கப்படவில்லை.
கூட்ட நெரிசலில் 30 வயது பெண் பக்தர் ஒருவர் ஊஞ்சல் உற்சவத்தின் போது மயங்கி விழுந்தார். சாலையோரம் துாங்கிய பக்தர்கள் அமாவாசை நாட்களில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்களில் ஒரு பகுதியினர் விடியும் வரை வெட்டவெளியில் தங்குகின்றனர். இவர்களுக்காக பெரிய அளவிளான தங்கும் வளாகம் இல்லை.
இதனால் பக்தர்கள் உயிருக்கும், உடமைக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. சாலை ஓரம் துாங்கியவர்கள் மீது கடை நடத்துபவர்கள் தண்ணீரை ஊற்றினர், ஆபாச வாத்தையால் திட்டினர். இந்த அவலம் போலீசார் முன்னிலையிலேயே அரங்கேறியது.
எனவே பத்தர்கள் தங்குவதற்கு பெரிய அளவில் மண்டபங்களை பெண்களுக்கு தனியாகவும், குடும்பத்தினருக்கு தனியாகவும் அமைக்க வேண்டும்.
விழா நாட்களில் கார், வேன்கள், பைக் மற்றும் சிறப்பு பஸ்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருகின்றன. இவற்றை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லை. 70 சதவீதம் வாகனங்களை சாலையோரம் நிறுத்துகின்றனர்.
ஊஞ்சல் முடிந்து இரவு 12:00 மணிக்கு ஒரு பகுதி பக்தர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். அதே நேரம் புதிதாக ஆயிரக்கணக்கான பக்கர்கள் எதிர் திசையில் கோவிலுக்கு வந்தனர். இரண்டு பக்கமும் வாகனங்கள் வந்ததால் வளத்தி ரோடு, வடபாலை ரோடு, அவலுார்பேட்டை ரோட்டில் நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக வடபாலை சாலையில் அதிகாலை 3:00 மணி வரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது.
இதற்கு நிரந்தர தீர்வாக கோவிலுக்கு வரும் சாலைகளில் பெரிய அளவில் பாக்கிங் வசதி செய்ய வேண்டும்.
பெரும் கூட்டம் கூடும் நாட்களில் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது.
ஏற்கனவே விழா நாட்களில் பலர் இறந்துள்ளனர். 12ம் தேதி நள்ளிரவு ஊஞ்சல் உற்சவம் நடந்த இடத்தில் மயங்கி விழுந்து பெண்ணை கொண்டு செல்ல ஸ்டெக்சரோ, முதலுதவி அளிக்க மருத்துவ குழுவோ அங்கு இல்லை.
ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் அந்த பெண்ணை மருத்துவ முகாமுக்கு துாக்கிச் சென்றனர். இதே போல் பலருக்கும் மருத்துவ உதவி தேவைப்பட்டது.
எனவே ஊஞ்சல் நடக்கும் இடத்தில் முதலுதவி குழுவினர் ஸ்டெரக்சர் வசதியுடன் இருக்க வேண்டும். அத்துடன் கோவில் வளாகம் மட்டுமின்றி மொபைல் மருத்துவ குழுவை எல்லா முக்கிய சாலைகளிலும் நிறுத்த வேண்டும்.
விழாக்களின் போது 500 முதல் 1000 போலீசாரை குவிக்கின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் கோவில் வளாகத்திலேயே நிறுத்தப்படுகின்றனர். இவர்கள் வி.ஐ.பி., பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்தை சரி செய்ய குறைந்த எண்ணிக்கையில் போலீசாரை நியமிக்கின்றனர்.
பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துவிட்ட நிலையில் அதற்கு ஏற்ப அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும். இந்து சமய அறநிலைத்துறையும், அரசும் இதில் கவனம் செலுத்தி பெரிய அளவிலான நிரந்தர திட்டங்களை செயல் படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
