/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க.,மாநில தலைவர் பதவி பறிப்பு பனையூரில் முடங்கிய அன்புமணி
/
பா.ம.க.,மாநில தலைவர் பதவி பறிப்பு பனையூரில் முடங்கிய அன்புமணி
பா.ம.க.,மாநில தலைவர் பதவி பறிப்பு பனையூரில் முடங்கிய அன்புமணி
பா.ம.க.,மாநில தலைவர் பதவி பறிப்பு பனையூரில் முடங்கிய அன்புமணி
ADDED : ஏப் 11, 2025 08:09 PM

திண்டிவனம்:கட்சி பதவி பறிப்பு காரணமாக, பனையூரிலுள்ள வீட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி முடங்கியதால் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
பா.ம.க., மாநில இளைஞரணி தலைவராக பதவி வகித்து வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணிக்கு, கடந்த 2022ம் ஆண்டில் கடந்த 25 ஆண்டுகளாக மணி வகித்து வந்த பா.ம.க., மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டு, அன்புமணி கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று முன்தினம் அன்புமணி வகித்து வந்த மாநில தலைவர் பதவியை பறித்து, அவருக்கு அதிகாரம் இல்லாத செயல் தலைவர் பதவியை வழங்குவதாக அறிவித்தார்.
திடீர் பதவி பறிப்பு அன்புமணியின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக அவருக்கு மீண்டும் மாநில தலைவர் பதவி வழங்க வேண்டும் என திண்டிவனத்திலுள்ள கட்சியின் நிறுவனர் வீட்டிற்கு எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதே போல் மாநிலமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அவரது ஆதரவாளர்கள் தயாரான நிலையில், சென்னை, பனையூரில் உள்ள அன்புமணியின் உதவியாளர்கள், கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, பதவி நீக்கம் தொடர்பாக யாரும் எந்த வித ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக திண்டிவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் தவிர தமிழகத்தில் வேறு எந்த இடத்திலும் அன்புமணி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் அமைதி காத்தனர்.
இதற்கிடையே, தைலாபுரம் தோட்டத்தில் கட்சி நிறுவனரிடம் கட்சியின் மூத்த நிர்வாகிகள், குடும்ப உறுப்பினர்கள் சமாதானம் செய்த போது, 'நான் தலைவராக இருக்க கூடாதா. நான் உயிரோடு இருக்கும் வரை நான் தான் தலைவராக இருப்பேன்' என உறுதியாக கூறியதாக, கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வரும் மே 11ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு மாநாட்டின் தலைவராக அன்புமணி உள்ள நிலையில், அவரும் மாநாட்டிற்கு கட்சியினரை திரளாக கலந்து கொள்வது குறித்து, திண்டிவனம் உள்ளிட்ட பல இடங்களில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளார்.
தற்போது அவருடைய மாநில தலைவர் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டதால், அன்புமணி அப்செட் ஆகிவிட்டார்.
இதன் காரணமாக சென்னை, பனையூரில் உள்ள வீட்டில் கடந்த 2 நாட்களாக முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாமல்லபுரம் மாநாட்டு பணிகள் அதிகம் உள்ள நிலையில் பதவி பறிப்பு குறித்து அன்புமணி எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருவது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

