/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பழமையான சிற்பம் கண்டு பிடிப்பு: வரலாற்று ஆய்வாளர் தகவல்
/
பழமையான சிற்பம் கண்டு பிடிப்பு: வரலாற்று ஆய்வாளர் தகவல்
பழமையான சிற்பம் கண்டு பிடிப்பு: வரலாற்று ஆய்வாளர் தகவல்
பழமையான சிற்பம் கண்டு பிடிப்பு: வரலாற்று ஆய்வாளர் தகவல்
ADDED : ஆக 18, 2025 01:00 AM

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே தொரவியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தட்சிணாமூர்த்தி சிற்பம் மற்றும் 2 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மண்பாண்ட ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், தேர்தல் தனி தாசில்தார் பாரதிதாசன் ஆகியோர் விக்கிரவாண்டி ஒன்றியம் தொரவியில் ஆய்வில் ஈடுபட்ட போது கேணீஸ்வரர் கோவில் வளாகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தட்சிணாமூர்த்தி சிற்பமும் , பொறையாத்தம்மன் கோவில் அருகே உள்ள விளை நிலங்களில் கருப்பும் சிவப்பும் கலந்த பழமையான மண்பாண்ட ஓடுகள் , கருப்பு வண்ணத்தில் சுடு மண்ணால் செய்யப்பட்ட கைப்பிடி கண்டெடுக்கப்பட்டது. இவை, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தொல்லியலாளர் துளசிராமன் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:
தொரவியில் விளைநிலம் பகுதியில் அமைந்துள்ள கேணீஸ்வரர் கோவிலில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தட்சிணாமூர்த்தி சிற்பம் கண்டறியப்பட்டது.
பலகை கல்லில் நீள வடிவில் சிற்பம் வடிவமைக்கப்பட்டு,, ஆல மரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது காது, கை, கால்களில் அணிகலன் அணிந்தும், நான்கு கரங்களில் பின் கையில் தாமரை மொட்டு ஏந்தியும்,வலது கரம் அபய முத்திரையுடனும்,இடது கரம் சின் முத்திரையுடனும் காட்சியளிக்கிறார்.
வலது காலை மடக்கி, தொடை மீது வைத்து இடது காலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். காலுக்கு கீழே முயலகன் உள்ளார்.
சோழர் காலத்து கலை பாணிக்கு சிறந்த உதாரணமாக திகழும் இந்த சிற்பம் கி.பி.,10 ம் நுாற்றாண்டை சேர்ந்தது என மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதிபடுத்தியுள்ளார். ஏற்கனவே தொரவியில் பல்லவர் கால வினாயகர்,முருகன்,சோழர் கால கொற்றவை சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது முதுநிலை வருவாய் ஆய்வாளர் சந்திரவள்ளி, வி.ஏ.ஓ., கோவிந்தன், உதவியாளர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.