/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானுார் ஒன்றியத்தில் மேலும் ஒரு பூத்துறை அரசியல் கட்சியினர் 'அட்டூழியம்'
/
வானுார் ஒன்றியத்தில் மேலும் ஒரு பூத்துறை அரசியல் கட்சியினர் 'அட்டூழியம்'
வானுார் ஒன்றியத்தில் மேலும் ஒரு பூத்துறை அரசியல் கட்சியினர் 'அட்டூழியம்'
வானுார் ஒன்றியத்தில் மேலும் ஒரு பூத்துறை அரசியல் கட்சியினர் 'அட்டூழியம்'
ADDED : மார் 25, 2025 04:13 AM

வானுார் அருகே விதிமீறி செம்மண் வெட்டி எடுக்கப்படுவதால், பிரம்மாண்டமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
வானுார் ஒன்றியத்தில் உள்ள கொண்டலாங்குப்பம், கடகம்பட்டு கிராமங்கள் செம்மண் வளம் மிகுந்த பகுதியாகும். இங்குள்ள செம்மண் நிலப்பகுதியில், விவசாயிகள் தைல மரங்கள் நட்டு பராமரித்து வந்தனர். இப்பகுதியில், உள்ள பட்டா நிலங்களில் செம்மண் அள்ள கனிம வளத்துறை அனுமதி அளித்துள்ளது.
இதை பயன்படுத்தி விதிகளை மீறி செம்மண் வெட்டி எடுக்கப்பட்டு வருவதால், அப்பகுதியில் பல இடங்களில் 'கிடுகிடு' பள்ளங்கள் உருவாகி வருகிறது. பல ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பட்டா நிலங்களில் அ.தி.மு.க., - தி.மு.க., பிரமுகர்கள், பினாமி பெயர்களில் அனுமதி பெற்று, 50 அடி ஆழத்திற்கு மேல் செம்மண் வெட்டி எடுத்து வருகின்றனர். இதனால், அங்குள்ள மரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.
செம்மண் எடுக்கப்பட்ட இடத்தின் அருகே விவசாய நிலப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு, ஓடைகளாக மாறி வருவதால், விவசாயிகள் திகைப்பில் உள்ளனர். அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என புலம்புகின்றனர்.
பெரிய பள்ளங்கள் வெட்டி செம்மண் எடுப்பதால், வானுார் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
ஏற்கனவே வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட பூத்துறை ஊராட்சியில் அரசு செம்மண் குவாரியில் விதிமீறி செம்மண் எடுத்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த சுவடே இன்னும் மறையாத நிலையில், ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு பூமியை குடைந்து செம்மண் அள்ளி வருகின்றனர். இதனை ஆய்வு செய்யும் அதிகாரிகள் கண்டும் காணாமலும் இருக்கின்றார்களா அல்லது அந்த பகுதியில் அதிகாரிகளே இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
அந்த அளவிற்கு சுரங்கம் அமைப்பதைப் போல, பிம்ரமாண்டமான பள்ளங்கள் தோண்டி செம்மண் எடுத்து வருகின்றனர். இதனை முளையிலேயே கிள்ளி எறியவில்லையென்றால் இன்னொரு பூத்துறை உருவாகும் என்பதில் ஐயமில்லை.