/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மானியத்தில் வேளாண் உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
/
மானியத்தில் வேளாண் உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
மானியத்தில் வேளாண் உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
மானியத்தில் வேளாண் உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : டிச 15, 2024 10:58 PM
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், வேளாண் உதவி உபகரணங்கள் மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
தமிழக அரசு, வேளாண் உற்பத்தியை அதிகரித்திட, வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. நடப்பு 2024-25ம் ஆண்டுக்கு மாவட்டத்திற்கு, 95 எண்ணிக்கையில், 84.59 லட்சம் ரூபாய் இலக்கு பெறப்பட்டுள்ளது.
அதன்படி, தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானியத்தில் பவர் டில்லர் பெற 1.20 லட்சம் ரூபாய் மற்றும் விசை களையெடுப்பான்களுக்கு 63 ஆயிரம் ரூபாய் சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள் வாங்கிட 20 சதவீத கூடுதல் மானியமாக 48 ஆயிரம் ரூபாயும், விசை களை எடுக்கும் கருவி வாங்கிட கூடுதல் மானியமாக 25 ஆயிரத்த 200 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.
பொது பிரிவினைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 10 சதவீத கூடுதல் மானியம், அதிகபட்சமாக 12 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விசை களை எடுக்கும் கருவி வழங்கப்படுகிறது.
விவசாயிகள் தங்களின் பங்களிப்பு தொகையினை, உரிய நிறுவனத்திற்கு செலுத்தி பவர் டில்லர், விசை களை எடுக்கும் கருவி போன்ற வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், கூடுதல் விபரங்களுக்கு செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, வழுதரெட்டி, விழுப்புரம். தொலைப்பேசி எண். 04146 294888. விழுப்புரம் கோட்ட விவசாயிகள் 04146 258951, திண்டிவனம் கோட்ட விவசாயிகள் 04147 294486 ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

