ADDED : ஏப் 17, 2026 03:57 PM

விழுப்புரம்: சட்டசபை பொதுத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரத்தில் ஒளிவீச்சு கருவி மற்றும் கவுண்ட் டவுன் டைமர் மூலம் நுாறு சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் நுாறு சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி அனைத்து அரசு துறை அலுவலர்கள் பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முன்தினம், விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் திட்டம் சார்பில் பொதுமக்கள், முதல் தலைமுறை வாக்காளர்களிடையே நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில், மலர்களை பயன்படுத்தி பெண்கள் கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வீரவாழியம்மன் கோவில் அருகே, நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி ஓட்டுப்பதிவு நாள் குறித்த கவுண்ட் டவுன் டைமரை, மாவட்ட தேர்தல் அதிகாரி ேஷக் அப்துல் ரஹ்மான் துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின், காந்தி சிலையருகே நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி ஒளிவீச்சு கருவி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிகளில், மகளிர் திட்ட இயக்குநர் செந்தில் வடிவு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள் - பயிற்சி) இளவரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
