ADDED : செப் 04, 2025 01:56 AM

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பழமை வாய்ந்த கோவில்கள் புனரமைக்கப்படாமல், இந்து சமய அறநிலையத்துறையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பராமரிக்காமல் விடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலும் ஏராளமான பழமை வாய்ந்த கோவில்கள் பராமரிப்பின்றி ஒரு கால பூஜையை கூட நடத்தாமல் அறநிலையத்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
சுந்தர விநாயகர் கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. அந்த கோவிலை கையகப்படுத்தி, கோவிலின் நிலங்களையும் குத்தகை விட்டு வருமானம் பார்த்து வரும் இந்து சமய அறநிலையத் துறையினர், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு நடத்தாமலும், கோவிலை பராமரிக்காமலும் சிதைத்து வருகின்றனர்.
பழமை வாய்ந்த சுந்தர விநாயகர் கோவிலை உடனடியாக புனரமைத்து, திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். கோவில் நிலத்தின் வருவாயை, கோவில் நிர்வாகத்திடம் முமுமையாக ஒப்படைத்து, தினசரி பூஜை, வழிபாடுகளை நடத்த வேண்டும்.
சதீஷ்அப்பு,
இந்து முன்னணி விழுப்புரம் மாவட்ட தலைவர்.
மாவட்டத்தில் உள்ள மிகப்பழமை வாய்ந்த கோவில்களை, அதன் பழைமையான கட்டமைப்புகளை சிதையாமல் பாதுகாத்து, பொதுமக்கள் வழிபாட்டுக்கு வசதி செய்து தர வேண்டியது அதனை நிர்வகித்து வரும் இந்து சமய அறநிலையத் துறையின் பணியாகும்.
ஆனால், கோவில் சொத்துக்களில் வரும் வருமானத்தை மட்டும் பல ஆண்டுகளாக வசூலித்து பயனடைந்து வரும் அறநிலையத்துறை நிர்வாகம், பழமையான கோவில்களை பராமரிக்காமல் விட்டு வருகிறது.
இந்த வகையில் சுந்தர விநாயகர் கோவிலையும் பராமரிக்காமல் விட்டதால் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் சிதைந்து வருகிறது.
கிராமத்தினர் நீண்ட காலமாக அந்த கோவிலை சீர்படுத்தி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அறநிலையத்துறை நிர்வாகம் உடனடியாக அந்தக்கோவிலை ஆய்வு செய்து திருப்பணிகள் செய்து குடமுழுக்கு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
விஜயன்
விழுப்புரம் பா.ஜ., நகர தலை வர்
விழுப்புரம் வட்டாரத்திலேயே பெருமாள், சிவபெருமான் கோவில்களை போன்று மிகப்பெரிய கோவிலாக இது திகழ்ந்து வருகிறது. கடந்த, 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, எங்கள் கிராமத்தினரால் இக்கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்யப்பட்டு வந்தது.
இடையே இந்து சமய அறநிலையத்துறையினர் கோவில் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டதோடு, இந்த கோவிலுக்கு சுற்றுப்புற கிராமங்களில் உள்ள 10 ஏக்கர் அளவிலான நிலத்தை குத்தகை விட்டு, அதன் வருவாயையும் வசூல் செய்து வருகின்றனர். ஆனால், மிகப் பழமை வாய்ந்த இந்த கோவிலை 30 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்காமல் விட்டதால் படிப்படியாக சிதைந்து வருகிறது.
கோவிலை பராமரித்து, தி.மு.க., அரசு வாக்குறுதியளித்தபடி திருப்பணிகள் செய்து, குடமுழுக்கு நடத்தி தர வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். கோவில் முழுவதும் சிதைவதற்குள், அதனை ஆய்வு செய்து, கும்பாபிஷேகத்தை நடத்தி புதுப்பிக்க வேண்டும்.
ஏழுமலை மற்றும் திருசங்கு
ஊர் முக்கியஸ்தர்கள்.