/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற காதலனுக்கு தீவிர சிகிச்சை
/
பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற காதலனுக்கு தீவிர சிகிச்சை
பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற காதலனுக்கு தீவிர சிகிச்சை
பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற காதலனுக்கு தீவிர சிகிச்சை
ADDED : டிச 07, 2024 03:57 AM

திருக்கோவிலுார் : விழுப்புரம் அடுத்த நல்லாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் மனைவி சத்யா, 28. கணவரை இழந்த இவர், தன், 3 வயது மகள் புவனாவுடன் திருக்கோவிலுார் அடுத்த மணம்பூண்டி கிராமத்தில் வசித்து வந்தார். வீடுகளில் வேலை செய்து வந்ததோடு, சூப்பர் மார்க்கெட் ஒன்றிலும் வேலை செய்து வந்தார்.
அப்போது, திருப்பாலபந்தலைச் சேர்ந்த முருகன், 50, என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், மணம்பூண்டி, தெய்வீகன் தெருவில் ஒரு வீட்டில் நேற்று காலை சத்யா வேலை செய்து கொண்டிருந்தார். காலை 8:30 மணிக்கு, 'ஸ்கார்பியோ' காரில் வந்த முருகன், சத்யாவை தன்னுடன் வருமாறு அழைத்தார். அதற்கு அவர் மறுக்கவே, ஆத்திரமடைந்த முருகன், தான் வைத்திருந்த கத்தியால், சத்யாவின் கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார்.
சத்யாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, முருகன் காரில் ஏறி தப்பினார். ரத்த வெள்ளத்தில் துடித்த சத்யா, சம்பவ இடத்திலேயே இறந்தார். கிராம மக்கள் அந்த காரை துரத்திச் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், மணம்பூண்டி, போக்குவரத்துக் கழக பணிமனை அருகே மின்கம்பத்தில் மோதி நின்றது; முருகன் காருக்குள்ளேயே மயங்கிக் கிடந்தார்.
அரகண்டநல்லுார் போலீசார், முருகனை மீட்டு, திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவரை டாக்டர் பரிசோதித்ததில், முருகன் ஏற்கனவே பூச்சிக்கொல்லி மருந்து குடித்து, தற்கொலைக்கு முயன்றிருந்தது தெரிந்தது.
தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அவரை போலீசார் அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.