/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
/
காரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு
ADDED : ஜூலை 14, 2025 03:56 AM
விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டிற்கு அறிவித்துள்ள காரீப் பருவத்தில் பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பினை ஈடுசெய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும், 2025-26ம் ஆண்டு சாகுபடி செய்யும் காரீப், சம்பா மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் காரீப் பருவத்திற்கு 13 தாலுகாக்களில் உள்ள 380 வருவாய் கிராமங்களில் நெல் பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும், நிலக்கடலை 24 குறுவட்டங்களிலும், கம்பு 8 குறுவட்டங்களிலும் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
இம் மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக யுனிவர்சல் சோம்போ இன்சூரன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நெல்லுக்கு செலுத்த வேண்டிய பிரீமியம் 1,725.71 ரூபாய். காப்பீடு தொகை 36,285.31 ரூபாய் கடைசி தேதி வரும் 31ம் தேதி ஆகும். வேர்க்கடலைக்கு பிரீமியம் 623.75 ரூபாய்,  காப்பீடு தொகை 31,187.37 ரூபாய்; கம்புக்கு பிரீமியம் 239.90 ரூபாய், காப்பீடு தொகை 11,995.14 ரூபாய் கடைசி தேதி வரும் ஆஸ்ட் 30ம் தேதி ஆகும்.
பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத்தொகை செலுத்தி விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வந்து பதிவு செய்யலாம். மேலும், விபரங்களுக்கு வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.
மேலும், கிரெய்ன்ஸ் திட்டத்தில், நில விபரங்களை பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய முடியும்.
விவசாயிகள் தங்கள் முழு நில விபரங்களையும் பதிவு செய்த பிறகு காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

