/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உழவர் நல சேவை மையம் அமைக்க அழைப்பு
/
உழவர் நல சேவை மையம் அமைக்க அழைப்பு
ADDED : ஆக 30, 2025 12:21 AM
விழுப்புரம் : மாவட்டத்தில், 30 சதவீத மானியத்தில் உழவர் நல சேவை மையம் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் செய்திக்குறிப்பு;
முதல்வரின் உழவர் நல சேவை மையம் திட்டம் 2025-26ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி வேளாண், தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்த இளைஞர்களின் பட்டறிவும் தொழில்நுட்பத்திறனும் உழவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பிலான உழவர் நல சேவை மையங்கள் அமைக்க 30 சதவீதம் மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும்.
இந்த மையங்களில் உழவர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பயிர்களில் ஏற்படும் பூச்சி நோய் மேலாண்மைக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குவதோடு அத்துடன் நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்த ஆலோசனை ஆகியவை வழங்கப்படும்.
மாவட்டத்திற்கு 17 மையங்கள் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது. வேளாண் உழவர் நலத்துறையில் வழங்கப்படும் அனைத்து உரிமங்களும் உழவர் நல சேவை மைய பயனாளிகளுக்கும் வழங்கப்படும். பயனாளிகள் விண்ணப்பங்களை நேரடியாக வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதில், 30 சதவீத பயனாளிகள் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில், பயனடைய விரும்பும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட வேளாண் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்த நபர்கள் வங்கிகளில் தங்களுடைய விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
வங்கி நடைமுறைகளை பின்பற்றி கடன் ஒப்புதல் பெற்ற பின்பு மானிய உதவி பெற https://www.tnagrisnet.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

