/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு
/
சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு
ADDED : செப் 25, 2024 10:49 PM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய, கலெக்டர் பழனி அழைப்பு விடுத்துள்ளார்.
இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பயிர் இழப்பை ஈடு செய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கவும், விழுப்புரம் மாவட்டத்தில் இந்தாண்டு சாகுபடி செய்யும் காரீப், சம்பா, ராபி பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாவட்டத்தில், சம்பா பருவத்திற்கு 13 வட்டாரங்களில் உள்ள 794 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
சம்பா பருவத்தில் நெல் 2 நடவு செய்துள்ள விவசாயிகள் வரும் நவ., 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக யுனிவர்சல் சோம்போ பொது காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நெல் 2க்கு விவசாயி ஏக்கருக்கு ரூ.517.5 செலுத்த வேண்டும். காப்பீட்டு தொகை ஏக்கருக்கு ரூ.34,500, இந்த பயிர் காப்பீட்டை வரும் நவ., 15ம் தேதிக்குள் செய்ய வேண்டும்.
பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீட்டு தொகை செலுத்தி பதிய வேண்டும்.
பதிவு செய்வதற்கு அடங்கல் 1434 பசலி, சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் எண், ஆகிய ஆவணங்கள் தேவையானதாகும். இவற்றோடு விவசாயிகளின் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் உள்ளிட்ட விபரங்களை சரியாக வழங்கி, பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என, கலெக்டர் பழனி தெரிவித்தார்.

