விஸ்வரூபம் எடுக்கபோகும் குடிநீர் பிரச்னை வரைவு திட்டம் உருவாக்கி வெளியிட கோரிக்கை
விஸ்வரூபம் எடுக்கபோகும் குடிநீர் பிரச்னை வரைவு திட்டம் உருவாக்கி வெளியிட கோரிக்கை
ADDED : ஏப் 07, 2026 02:49 AM
நாமக்கல், 'குடிநீர் பிரச்னை விஸ்வ
ரூபம் எடுக்க உள்ள நிலையில், ஏப்., மே, ஜூன் மாதங்களில் பற்றாக்குறையை சமாளிக்க, 'குடிநீர் மேலாண் வரைவு திட்டம்' உருவாக்கி, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்துக்கு, குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்குகிறது. குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள நாமக்கல் மாநகராட்சி, ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் ஆகிய, நான்கு நகராட்சிகள் மற்றும் 19 டவுன் பஞ்.,களுக்கு, கூட்டு குடிநீர் திட்டம் மூலமே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து முற்றிலும் இல்லாத நிலையில், ஆறு வறண்டு, மணல் திட்டாக காட்சியளிக்கிறது. இதனால், பெரும்பாலான பகுதிகளில், மக்களின் தண்ணீர் பிரச்னை தீர்க்க முடியாமல், அந்தந்த பகுதி நகராட்சி, டவுன் பஞ்., கிராம பஞ்., நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர். கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில், மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை
விஸ்வரூபம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: மேட்டூர் அணையில், 82.56 கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அதனால், குடிநீர் தேவைக்காக, தினமும், 1,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 150 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு, தண்ணீர் கிடைப்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை அடிவாரம் மற்றும் மோகனுார் காவிரி ஆற்றின் கரையோரம் சில இடங்களில் மட்டுமே விவசாயம் செய்யும் அளவுக்கு நீர் உள்ளது. மற்ற இடங்களில், நீர் கெட்டுவிட்டது. குறிப்பாக, 80 சதவீதம் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதனால், கோடைகாலமான, ஏப்., மே, ஜூன் மாதங்களில், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, 'குடிநீர் மேலாண் வரவு திட்டம்' மாவட்ட நிர்வாகம் உருவாக்கி வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
