/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன நரி ஆறு மீட்கப்படுமா? அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
/
ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன நரி ஆறு மீட்கப்படுமா? அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன நரி ஆறு மீட்கப்படுமா? அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன நரி ஆறு மீட்கப்படுமா? அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ADDED : மார் 13, 2024 06:38 AM
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன நரி ஆற்றை மீட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. விவசாயம் மட்டுமின்றி கால்நடை, கோழி வளர்ப்பு தொழிலும் பிரதானமாக உள்ளது. டெல்டா மாவட்டத்திற்கு நிகராக இங்கு நெல் சாகுபடி, உணவு தானிய உற்பத்தியும் உள்ளது. சவுக்கு, கரும்பு சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விவசாயிகள் ஆற்றுநீர், போர்வெல் பாசனம் மூலம் சாகுபடி செய்தாலும் மழைக் காலங்களில் ஏரி, குளங்களில் சேகரிக்கும் நீரை நம்பியே விவசாயம் செய்கின்றனர்.
பருவமழை பொய்த்தால் சாகுபடி பரப்பளவு குறைவது வழக்கமாக உள்ளது. மழைக் காலங்களில் தண்ணீரை சேமிக்கும் வகையில் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், வரத்து வாய்க்காலை துார்வார வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில், மாவட்ட நிர்வாகம் மூலம் இந்த ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்பட்டு ஏரி, குளங்கள் துார்வாரப்பட்டு வருகிறது. இதில், கடந்த பல ஆண்டுகளாக வளவனுாரில் உள்ள நரி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் தற்போது அந்த ஆறு இருந்த இடமே தெரியாமல் மறைந்து போனதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தளவானுார் அருகே மலட்டாற்றிலிருந்து பிரிந்து செல்லும் இந்த நரி ஆறு பில்லுார், ஆனாங்கூர், பஞ்சமாதேவி, சிறுவந்தாடு வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் ஏரிகளை நிரப்பவும், குடிநீர் ஆதாரத்திற்கு உதவியாக இருந்தது.
இந்த ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளது.
மாவட்டத்தின் நீர் ஆதாரமாக உள்ள தென்பெண்ணை, மலட்டாறு உள்ளிட்ட ஆறுகளிலிருந்து சிறு ஆறுகள், வாய்க்கால்கள் மூலம் ஏரி, குளங்களில் தண்ணீர் தேக்கி விவசாயம், குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நீர்நிலைகளில் நீரை தேக்கி வைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கோடை காலங்களில் ஏற்படும் வறட்சியை சமாளிக்க கை கொடுக்கிறது.
இதில் நரி ஆறு ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளதால் வில்லியனுார், சிறுவந்தாடு உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
இது பற்றி, பலமுறை குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் புகார்கூறியும் பலனில்லை.
இது பற்றி விவசாயிகள் தரப்பில் கூறுகையில், நரி ஆறு ஆக்கிரமிப்பில் உள்ளதால் பல கிராமங்களில் உள்ள பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரின்றி வீணாகி வருகிறது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
நரி ஆறு ஆக்கிரமிப்பையும், ஆழங்கால் வாய்க்கால் மூலம் நரி ஓடைக்கு செல்லும் நீர்வழி பாதையை தடை செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப் பணித்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.

