/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சர்வதேச நகரில் கஞ்சா விற்பனை 'ஜோர்'
/
சர்வதேச நகரில் கஞ்சா விற்பனை 'ஜோர்'
ADDED : ஜன 14, 2025 07:07 AM
புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. இங்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த சுற்றுலா பயணிகள், சுற்று வட்டாரத்த்தில் உள்ள தனியார் விடுதிகளை தேர்வு செய்து தங்குகின்றனர்.
இது மட்டுமின்றி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பலர், கிழக்கு கடற்கரை சாலை, ஆரோவில் பகுதிகளில் அறை எடுத்து தங்குகின்றனர். இவர்களுக்கு சமீப காலமாக கஞ்சா சர்வ சாதாரணமாக கிடைத்து வருகிறது.
இவர்கள், கஞ்சா புகைத்து போதை தலைக்கேறியதும், என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், பொது மக்களுக்கு தொந்தரவு அளித்து வருகின்றன. அவர்களுக்கு பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் இருந்து தான் வியாபாரிகள் மொபைல் போன் மூலம் கஞ்சா டெலிவரி செய்து வருகின்றனர். இது போலீசாருக்கு நன்கு தெரியும். ஆனால் கண்டும் காணாமல் இருந்தால், கஞ்சா வியாபாரிகளின் காட்டில் அடை மழை பெய்து வருகிறது. இதனால் வியாபாரிகள், கஞ்சா டெலிவரி மற்றும் தூரத்தை கணக்கிட்டு, கஞ்சா அடிமைகளிடம் இருந்து லாபம் பார்த்து வருகின்றனர்.
தற்போது மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி., பொறுப்பேற்றுள்ளார். அவர் உத்தரவின் பேரில் நீண்ட நாட்களுக்கு பிறகு கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் குட்கா விற்பவர்கள் பக்கம் போலீசாரின் பார்வை திரும்பியுள்ளது.
கடந்த இரு தினங்களாக குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை பொறி வைத்து தூக்கும் போலீசார், கஞ்சா விற்பனை செய்யும் நபர்களின் பக்கமும் திசை திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.