/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயான பகுதி ஆக்கிரமிப்பு: கண்காணிப்பு குழு ஆய்வு
/
மயான பகுதி ஆக்கிரமிப்பு: கண்காணிப்பு குழு ஆய்வு
ADDED : ஆக 25, 2025 11:13 PM
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்புகள் தொடர்பாக விழிப்பு கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்களின் நலனுக்காக, அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் மாவட்ட விழிப்பு கண்காணிப்பு குழு இயங்குகிறது. இந்த குழுவினர், பட்டியலின மக்களுக்கான சுடுகாடு ஆக்கிரமிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் சம்பந்தமாக ஆய்வு செய்தனர்.
கண்டாச்சிபுரம் அருகே கடையம் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கான சுடுகாடு ஆக்கிரமிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விழிப்பு கண்காணிப்பு குழு உறுப்பினர் அகத்தியன் தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வைத் தொடர்ந்து விழிப்பு கண்காணிப்பு குழுவினர்கள் கூறியதாவது,
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம், திண்டிவனம், வானுார், செஞ்சி, மேல்மலையனுார் தாலுகா அலுவலகங்கள் கலெக்டர் மேற்பார்வையில் இயங்குகிறது.
இந்த வட்டத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் பட்டியலின ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல வழியின்றி பல கி.மீ., துாரம் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.
ஒரு சில கிராமங்களில் சுடுகாட்டிற்கு பாதை இருந்தும் பராமரிப்பு இல்லாததால் குண்டும், குழியாக யாரும் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
சுடுகாட்டிற்கு சொந்தமான இடங்களை சிலர் ஆக்கிரமித்து விளை நிலங்களாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரச்னையை சரிசெய்ய பொதுமக்கள், வருவாய் துறை, பி.டி.ஓ.,க்களை சந்தித்து முறையிட்டாலும் நடவடிக்கை இல்லை.
தமிழக முதல்வர், பொது மயானம் அமைக்கும் கிராமங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளதை, ஊராட்சிகளில் செயல்படுத்துவது கடினமாக உள்ளது.
கலெக்டர், தாசில்தார்களுக்கு சுடுகாடு தொடர்பாக குறைகள் உள்ள கிராமங்களின் குறிப்புகளை புள்ளி விபரம் எடுத்து, மயான பாதைகள், குடிநீர் தேவைகளுக்கான வசதிகள் இல்லாத கிராமங்களை ஆய்வு செய்து இதற்கான வசதிகளை செய்து தர வேண்டும்.
இவ்வாறு கண்காணிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.