/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புயலால் பாதித்த மக்களுக்கு விரைவாக நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்
/
புயலால் பாதித்த மக்களுக்கு விரைவாக நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்
புயலால் பாதித்த மக்களுக்கு விரைவாக நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்
புயலால் பாதித்த மக்களுக்கு விரைவாக நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்
ADDED : டிச 03, 2024 06:08 AM
விழுப்புரம்: ''முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, மழையால் பாதித்த மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
விழுப்புரத்தில் புயலால் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:
'பெஞ்சல்' புயல் பாதிப்பையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திற்கு 407 வீரர்கள் கொண்ட 7 தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்களும், 8 மாநில பேரிடர் மேலாண்மை குழுக்கள் என 15 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடலுார் மாவட்டத்திற்கு 2 குழுக்களும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஒரு குழுவும் அனுப்பப்பட்டுள்ளன. இவர்களோடு தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 180, கடலுார் - 247, திருவண்ணாமலை - 210 என மொத்தம் 637 தீயணைப்பு அலுவலர்கள், பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பாக மக்களை தங்க வைக்க 174 நிவாரண மையங்கள் செயல்படுகிறது. இதில், 7,876 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மின்சாரம் இல்லாமல் பல பகுதிகள், கிராமங்கள் சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது. இதை சரிசெய்ய 900 பேர் மின்வாரிய துறை மூலம் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் தேங்கிய இடங்களில் மின்சாரம் தர முடியாத சூழல் உள்ளது. நீர் வடிந்த பகுதிகளில் உடனே மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கடலோர மாவட்டங்களில் மழை குறைந்தாலும், உள் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ்., தலைமையில் மீட்பு, நிவாரண பணிகளை தீவிரப்படுத்த ஒரு சிறப்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்படி, 1,29,000 ஹெக்டேர் சேதம் ஏற்பட்டுள்ளதாக புள்ளி விபரம் பெறப்பட்டுள்ளது.
மழை முழுவதுமாக நின்ற பின், தேங்கிய நீர் வடிந்தபின், முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, பாதித்த மக்களுக்கு உரிய நிவாரணம் நிச்சயமாக வழங்கப்படும்.
நானும், சென்னையில் கள ஆய்வுகள், ஆய்வு கூட்டங்கள் நடத்தி தற்போது பாதித்த பகுதிகளை பார்வையிட்டுள்ளேன். பாதித்த மக்களை உடனே பாதிப்பிலிருந்து மீட்டு, இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரும் பணிகளை உடனே செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளேன்.
பெஞ்சல் புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான அறிக்கையை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மழை சேதங்களை பார்வையிட உடனே குழுவை அனுப்பி வைப்பதற்கான கோரிக்கைகளை தமிழக அரசு சார்பில் வைக்கவுள்ளோம்.இவ்வாறு முதல்வர் கூறினார்.