/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதல்வர் கோப்பை போட்டி; மாற்றுத்திறனாளிகள் ஆர்வம்
/
முதல்வர் கோப்பை போட்டி; மாற்றுத்திறனாளிகள் ஆர்வம்
ADDED : செப் 06, 2025 08:09 AM

விழுப்புரம்; மாற்றுத்திறனாளிகளுக்கு நடந்த முதல்வர் கோப்பைக்கான விளையாட்டில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இப்போட்டி பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொது மக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவினருக்கு, மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டு போட்டிகளாக நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசு தொகையும், பதக்கமும் வழங்கப்படும்.
இதன்படி, முதல்கட்டமாக பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான குழு போட்டிகள் நடந்துள்ளது. இதனையடுத்து, நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்தது.
விழுப்புரம் விளையாட்டு மைதானத்தில் மாற்று திறனாளிகளுக்கு தடகள போட்டிகள், குழு போட்டிகளும் தனித்தனியாக நடந்தது. காலை 10.00 மணிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன் போட்டியை துவக்கி வைத்தார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராஜசேகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் குழுவினர் முன்னிலை வகித்தனர். முதலில் ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு, தடகள போட்டிகள் நடந்தது.
கை பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ., ஓட்டப் போட்டிகளும், கால் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு 5 கிலோ குண்டு எறிதல் போட்டிகளும், பெண் மாற்று திறனாளிகளுக்கு 4 கிலோ குண்டு எறிதல் போட்டிகளும் நடந்தன. தொடர்ந்து இருபாலருக்கும், கண் குறைபாடுடையோருக்கு 100 மீ., ஓட்டப் போட்டிகளும், குண்டு எறிதல் போட்டிகளும் நடந்தன. காது குறைபாடு உடைய இருபாலர் மாற்று திறனாளிகளுக்கும் கபடி போட்டியும் நடந்தது.
குழு போட்டிகளாக, கண் குறைபாடு உடையவர்களுக்கு இருபாலருக்கும் தனித்தனியாக வாலிபால் போட்டிகள் நடந்தது. மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு, எறிபந்து போட்டிகளும், காதுகேளாத மாற்று திறனாளிகளுக்கு 100 மீ., ஓட்டமும், குண்டு எறிதல் போட்டிகளும் தனித்தனியாக நடந்தது. கடும் வெயில் காரணமாக குடிநீர், குளிர்பானங்கள் உள்ளிட்ட கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மாற்று திறனாளிகள் கோரிக்கை வைத்தனர்.
இதில், கபடி போட்டியில், விழுப்புரம் டெப் கபடி குழுவும், விழுப்புரம் வேலா சிறப்பு பள்ளி குழுவினரும் முதலிடம் பிடித்தனர். நிறைவாக, ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்றவருக்கு ரூ.3,000, இரண்டாமிடத்திற்கு ரூ.2000, மூன்றாமிடத்திற்கு ரூ.1,000 பரிசும், பதக்கமும் வழங்கப்பட்டன.