ADDED : ஜன 03, 2025 01:54 AM

அவலுார்பேட்டை,:வளத்தி அருகே கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை  இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வளத்தி அடுத்த கன்னலம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்,30; இவரது மனைவி சித்ரா,25; இவர்களுக்கு ஷாலினி,4; சிவன்சிகா,2; இரு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 31ம் தேதி தம்பதி தங்கள் குழந்தை சிவன்சிகாவுடன், வயலுக்கு சென்றனர். அங்கு குழந்தையை இறக்கிவிட்டுவிட்டு, இருவரும் விவசாய வேலை பார்த்தனர்.  வயலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, அருகில் இருந்த 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் குழந்தையை மீட்க முயன்றனர்.
தகவலறிந்த மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பரஞ்ஜோதி மற்றும் தீயணைப்பு படையினர் வெகு நேரம் போராடி குழந்தை உடலை மீட்டனர்.  இதுகுறித்து வளத்தி போலீசார் வழக்குப்  பதிந்து விசாரித்து வருகின்றனர்.

