/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் கூட்ரோட்டில் தேங்கியுள்ள தண்ணீரால் பொதுமக்கள்... அவதி; கல்வெர்ட் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை
/
திண்டிவனம் கூட்ரோட்டில் தேங்கியுள்ள தண்ணீரால் பொதுமக்கள்... அவதி; கல்வெர்ட் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை
திண்டிவனம் கூட்ரோட்டில் தேங்கியுள்ள தண்ணீரால் பொதுமக்கள்... அவதி; கல்வெர்ட் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை
திண்டிவனம் கூட்ரோட்டில் தேங்கியுள்ள தண்ணீரால் பொதுமக்கள்... அவதி; கல்வெர்ட் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை
ADDED : ஆக 27, 2024 04:09 AM

திண்டிவனம் : திண்டிவனம் - புதுச்சேரி சாலையில்வெள்ளவாரி வாய்க்காலை தடுத்து பணிகள் நடப்பதால், மரக்காணம் கூட்ரோட்டில்தண்ணீர் தேங்கி பெருக்கெடுத்துள்ளது.இதனால், பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.
திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்யும்போது, காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் அனைத்தும் திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் உள்ள காந்தி நகர், வகாப் நகர், விவேகானந்தன் நகர் பகுதியில் வீடுகளை சூழ்வது தொடர்கதையாக இருந்து வந்தது.
இதற்கு காரணம், மரக்காணம் சாலையில் செல்லும் பிரதான வெள்ளவாரி வாய்க்கால் மழை நீரை உள்வாங்கி வெளியேற்றும் வகையில் போதுமான அகலம் இல்லாமல் இருப்பதால், திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் சூழ்ந்து குளம் போல் தேங்கி விடுகிறது.
நீண்ட நாள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், நகாய் சார்பில் திட்டம் தயாரிக்கப்பட்டது. அதன்படி, திண்டிவனம் சாலையில் உள்ள வகாப் நகர் எதிரில் (டி.கே.பி., பெட்ரோல் பங்க் எதிரில்) உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 'டபுள் பாக்ஸ் கல்வெர்ட்' அமைப்பதற்காக, 1 கோடியே 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த கல்வெர்ட் மூலம், மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் போது, வகாப் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியேறும் உபரிநீர் அனைத்தும் கல்வெர்ட் வழியாக, தடையில்லாமல் வெள்ளவாரி வாய்க்கால் வழியாக வெளியேறி கடலுக்கு சென்று விடும்.
இதன் தொடர்ச்சியாக, நகாய் சார்பில் திண்டிவனம் - புதுச்சேரி நான்கு வழிச்சாலையில் ஒரு பகுதியில் (திண்டிவனம்-புதுச்சேரி சாலை) மட்டும் கல்வெர்ட் அமைக்கும் பணி கடந்த மே மாதம் முடிவடைந்து விட்டது.
அடுத்தக்கட்டமாக, புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் ஒரு பகுதியில் கல்வெர்ட் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில் கல்வெர்ட் அமைக்கும் பணி முடிந்துள்ள நிலையில், மேல்பகுதியில் புதிய தார் சாலை பணிகள் மட்டும் முடியாமல் உள்ளது. தற்போது கல்வெர்ட் அமைக்கப்பட்ட இடத்தில் பணிகள் நடப்பதால், அந்த வழியாக செல்லும் வெள்ளவாரி வாய்க்காலில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், வெள்ளவாரி வாய்க்கால் வழியாக வெளியேறும் நீர் அனைத்தும், திண்டிவனம் - புதுச்சேரி சாலையிலுள்ள மரக்காணம் கூட்ரோட்டில் கடந்த இரண்டு நாட்களாக வெள்ளம் போல் தேங்கியுள்ளது.
சென்னையிலிருந்து திண்டிவனம் புறவழிச்சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தண்ணீர் தேங்கியுள்ள மரக்காணம் கூட்ரோட்டை கடப்பதில் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இதேபோல், திண்டிவனத்திலிருந்து மரக்காணம் வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் ஆபத்தான நிலையில் அந்த இடத்தை கடக்க வேண்டியுள்ளது.
வெள்ளவாரி வாய்க்காலில் உள்ள தடுப்பு காரணமாக, மரக்காணம் கூட்ரோட்டில் நடைபெறும் நான்கு வழிச்சாலையில் அமைக்கப்பட உள்ள கல்வெர்ட் அமைக்கும் இடத்திலும் மழை நீர் தேங்கியுள்ளது.
இதுகுறித்து நகாய் அதிகாரிகளிடம் கேட்டபோது, ''தற்போது டபுள் பாக்ஸ் கல்வெர்ட் அமைக்கும் இடத்தில் பணிகள் நடப்பதால், தற்காலிகமாக வெள்ளவாரி வாய்க்காலில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், தண்ணீர் சாலையில் தேங்கியுள்ளது. சாலையில் தேங்கியுள்ள நீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், டபுள் பாக்ஸ் கல்வெர்ட் அமைக்கும் பணி 15 நாட்களுக்குள் முடிந்துவிடும். அதன் பிறகு போக்குவரத்து சீராகிவிடும்'' என்று தெரிவித்தனர்.

