/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விபத்தில்லா தீபாவளி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
/
விபத்தில்லா தீபாவளி கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
ADDED : அக் 26, 2024 07:46 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என கலெக்டர் பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
தமிழக அரசு, கடந்த ஆண்டைப்போலவே, இந்தாண்டும் தீபாவளி பண்டிகையன்று காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியுள்ளது.
பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதியளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக்காப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் விதிமுறை களை கடைபிடிக்க வேண்டும்.
மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற, விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.