/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விபத்து பகுதிகளில் ஆய்வு நடத்த கலெக்டர் அறிவுறுத்தல்
/
விபத்து பகுதிகளில் ஆய்வு நடத்த கலெக்டர் அறிவுறுத்தல்
விபத்து பகுதிகளில் ஆய்வு நடத்த கலெக்டர் அறிவுறுத்தல்
விபத்து பகுதிகளில் ஆய்வு நடத்த கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : ஆக 01, 2025 03:06 AM

விழுப்புரம்: சாலை விபத்து பகுதிகளில் அதிகாரிகள் கூட்டாய்வு செய்து, விபத்தை தடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல்ரஹ்மான் தலைமை வகித்து, மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் மாவட்டத்தில் தற்போது வரை நடைபெற்ற சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை, அந்த விபத்துக்கான காரணங்கள், அந்த பகுதிகளில் விபத்து நடைபெறாமல் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்து வரும் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடித்திட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
இதில், சாலை பணிகள் நடப்பது தொடர்பாக, 100 மீட்டருக்குள்ளாகவே தகவல் பலகைகளை அமைக்க வேண்டும்; அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில், நல்ல முறையில் சர்வீஸ் சாலைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்;
பஸ்கள் சர்வீஸ் சாலைகளில் வந்து பயணிகளை இறக்கி, ஏற்றிய பின்னரே மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல, டிரைவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் விபத்து ஏற்படும் பகுதிகளில், உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர், போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் கூட்டாக பார்வையிட்டு, அதற்கான காரணத்தை ஆய்வு செய்து மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்; அனைத்து சாலைகளிலும், வேகத்தடை தொலைவில் இருந்தே தெரியும் வகையில் 'தெர்மோபிளாஸ்ட்' பெயிண்ட்டால் கோடுகள் அடிக்க வேண்டும்.
அனைத்து நெடுஞ்சாலைகளிலும் ஊர் தகவல் பலகைகள் தேவையான இடங்களில் அமைக்க வேண்டும்; நெடுஞ்சாலை சந்திப்பு சாலைகளை மேம்படுத்தி, தேவையான இடங்களில் ஆய்வு செய்து உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும். ஊர் திசைகாட்டும் பலகைகளை 50 மீட்டருக்கு முன்னரே நிறுவ வேண்டும்; என, கலெக்டர் வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் எஸ்.பி., சரவணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

