/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: வாலிபர் கைது
/
ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: வாலிபர் கைது
ADDED : நவ 10, 2024 06:35 AM
விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஆனத்தூர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக, விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார், ஆனத்தூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக மொபட்டில் மூன்று சாக்கு மூட்டைகளை எடுத்து சென்றவரை பின்தொடர்ந்து சென்றனர்.
அந்த வாலிபர் ஆனத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் முட்புதருக்குள் அந்த சாக்கு மூட்டைகளை பதுக்கி வைத்தார். உடனே போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில், 50 கிலோ எடையுள்ள 21 சாக்கு மூட்டைகளில் ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், வேலூர் மாவட்டம் சஞ்சீவிராயபுரம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் அரவிந்த் , 19; வேலூரில் வாத்துப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.
வாத்துகளின் தீவனத்திற்காக ஆனத்தூர் சுற்று வட்டாரப் பகுதி மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, வேலூருக்கு சரக்கு வாகனம் மூலம் கடத்திச்செல்ல இருந்தது தெரியவந்தது.
அதையடுத்து அரவிந்தை போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.