/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் சீரமைக்கும் பணி துவக்கம்
/
கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் சீரமைக்கும் பணி துவக்கம்
கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் சீரமைக்கும் பணி துவக்கம்
கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் சீரமைக்கும் பணி துவக்கம்
ADDED : டிச 29, 2024 07:24 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தின் வடக்கு பகுதி சாலையில் போக்குவரத்து துவங்கும் முன் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் 90 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது. இதில், புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில், கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் பணி இறுதிகட்டமாக மேற்கொள்ளப் பட்டது.
அதையொட்டி, அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப் பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. பல மாதங்களுக்கு பிறகு, ரயில்வே மேம்பாலத்தின் தெற்கு பகுதி சாலையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் போக்குவரத்து துவங்கியது.
பாலத்தின் வடக்கு பகுதி சாலை பணிகள் நிறைவடைந்து டிசம்பர் மாதம் போக்குவரத்து துவங்கும் என நகாய் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, இரண்டு மாதங்களாக வடக்கு பகுதி சாலையில் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்திற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாலை பயன்பாட்டிற்கு வரும் முன் விரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக சாலையை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது. முதல்கட்டமாக, விரிசல் ஏற்பட்ட பகுதியில் 1 மீட்டர் அகலம், 1 அடி ஆழம் அளவிற்கு சிமென்ட் சாலையை தோண்டியெடுக்கப்பட்டது. சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் - நாகை நான்குவழி சாலையில் திருவாண்டார்கோயில், மதகடிப்பட்டு மற்றும் விழுப்புரம் அருகே மேம்பாலங்கள் விரிசலை அடைத்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்திலும் விரிசல் ஏற்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

