
கணவர் மாயம்: மனைவி புகார்
வானுார் அடுத்த கடப்பேரிக்குப்பத்தை சேர்ந்தவர் கவிமணி மனைவி பவாணி,25; தம்பதிக்குள் கடந்த 3ம் தேதி குடும்ப தகராறு ஏற்பட்டது. அதில் மனமுடைந்த த கவிமணி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பவாணி கொடுத்த புகாரின் பேரில் வானுார் போலீசார் வழக்கு பதிந்து, கவிமணியை தேடிவருகின்றனர்.
இறந்த முதியவர் யார்?
வானுார் அடுத்த பெரம்பை அப்துல் கலாம் நகர் மனைப்பிரிவில் நேற்று முன்தினம் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். நீல நிற முழுக்கை சட்டை, நீல நிற சிறு கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார். அவரது வலது கையில் கஸ்துாரி என பச்சை குத்தப்பட்டுள்ளது. ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
சாராய வியாபாரிக்கு தடுப்பு காவல்
ஓமந்துார் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் முரளி,42; இவர், கடந்த ஆக., 7 ம் தேதி, பெருமுக்கல் ஏரிக்கரை அருகே சாராயம் விற்ற போது, பிரம்மதேசம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது சாராய வழக்கு பல உள்ளதால், இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., தீபக் சிவாச் பரிந்துரையை ஏற்று, முரளியை தடுப்பு காவலில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் பழனி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை, கடலுார் மத்திய சிறையில் உள்ள முரளியிடம் நேற்று பிரம்மதேசம் போலீசார் வழங்கினர்.
மின்னல் தாக்கி விவசாயி பலி
வளத்தி அடுத்த நெகனுார் புதுார் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி,55; விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு அவரது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது, இடி, மின்னலுடன் மழை பெய்தது. அதில், தண்டபாணி, மின்னல் தாக்கி இறந்தார். வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நெஞ்சு வலியால் 2 பேர் பலி
சேலம் குண்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு,47; லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு சேலத்தில் இருந்து ரிஷிவந்தியத்திற்கு உர மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். அதிகாலை 4:00 மணிக்கு பிரதிவிமங்கலம் மணிமுக்தா ஆற்றுப்பாலம் அருகே சென்ற போது நெஞ்சு வலிக்கவே, பாபு லாரியை சாலையோரம் நிறுத்தினார். சற்று நேரத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார்.
திருச்சி மாவட்டம் துரையூர் கல்லாங்குத்து கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் பழனிவேல்,29; கிணறு வெட்டும் தொழிலாளி. இவர் கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரில் கிணறு வெட்டும் கூலி வேலை செய்தபோது, கடந்த 23 ம் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகார்களின் பேரில் தியாகதுருகம் மற்றும் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பைக் திருட்டு
சங்கராபுரம் அடுத்த கடுவனுாரை சேர்ந்தவர் ராசேந்திரன்,35. இவர் தனது பைக்கை, நேற்று முன்தினம் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை. புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.
முன் விரோத தகராறு
கல்வராயன் மலையில் உள்ள துரூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பரமசிவம், 39; அண்ணமாலை, 44; இருவருக்கும் வீட்டு மனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இருதரப்பு புகார்களின் பேரில் அண்ணாமலை, மின்னல்ராஜா, பரமசிவம் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளச்சாராயம் விற்றவர் கைது
சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தகரை கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு செல்லியம்மன் கோவில் அருகே கள்ளச்சாராயம் விற்ற முத்துசாமி மகன் கந்தசாமி,38;யை கைது செய்தனர். அவரிடமிருந்து 120 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கரியாலுார் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது வண்டகபாடி மலைக்கோவில் அருகே சாராயம் விற்றுக் கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த ஆண்டி என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவர் விற்பனைக்கு வைத்திருந்த சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து ஆண்டியை தேடிவருகின்றனர்.
பைக்குகள் மோதல்: ஒருவர் காயம்
கச்சிராயபாளையம் அடுத்த தென்செட்டியனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்,51; இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் எலியத்துார் - பைத்தந்துறை பிரிவு சாலையில் சென்றபோது, பின்னால் வந்த பைக் மோதியது. அதில், படுகாயமடைந்த செல்வராஜ், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.