ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி
திண்டிவனம் அடுத்த நெய்குப்பியைச் சேர்ந்தவர் ஞானவேல், 40; ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் ஆட்டோவில் சென்ட்ரிங் பலகை ஏற்றிச் சென்றார். உடன் அதே கிராமத்தைச் சேர்ந்த வைத்தியலிங்கம், 74; என்பவர் சென்றார். கிராமத்தில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த ஜே.சி.பி., மீது ஆட்டோ உரசி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படுகாயமடைந்த வைத்தியலிங்கம், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தனியார் நிறுவனத்தில் மோசடி
கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ், 34; விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். சமீபத்தில் நிறுவனத்தில் கணக்குகளை தணிக்கை செய்தனர்.
அதில், கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் வரை 9 லட்சத்து 99 ஆயிரத்து 96 ரூபாய் சுபாஷ் சந்திரபோஸ் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிறுவன முதுநிலை மேலாளர் அபிஷேக் பார்த்தசாரதி அளித்த புகாரின் பேரில், சுபாஷ் சந்திரபோஸ் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
குட்கா விற்ற 2 பேர் கைது
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயாஜ் தலைமையிலான போலீசார் துலுக்கப்பாளையம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் குட்கா விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த பெட்டிக் கடைக்காரர் முரளி, 39; கள்ளக்குறிச்சி மாவட்டம், எம்.குன்னத்துார் முருகன், 42; ஆகிய இருவரையும் கைது செய்து இவர்களிடமிருந்து 25 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கணவர் மாயம்: மனைவி புகார்
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் ரஜினி, 29; கூலித்தொழிலாளி. இவரை கடந்த 10ம் தேதி முதல் காணவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மனைவி பரமேஸ்வரி அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.