முன்விரோத தகராறு: போலீஸ் விசாரணை
மயிலம்: தென்கலவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி அம்மச்சி, 38; இதே ஊரை சேர்ந்தவர் மோகன்ராமன், 42; இவர்களுக்கு இடையே முன் விரோதம் உள்ளது. சம்பவத்தன்று இரவு 10:00 மணிக்கு மோகன்ராமன், அம்மச்சி வீட்டிற்குச் சென்று தகராறு செய்து அம்மச்சி மற்றும் அவரது மகன் மணிகண்டனையும் தாக்கினார். தடுத்த ராணி என்பவரையும் தாக்கினார். புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
விழுப்புரம்: வளவனுார் அடுத்த தாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 50; இவர், நேற்று முன்தினம் அதே கிராமத்தில் உள்ள தனது நிலத்திற்கு மழை பெய்ததால் குடை பிடித்துச் சென்றார். அங்கு, தாழ்வாக சென்ற மின்கம்பியில் குடை கம்பி பட்டதால், மின்சாரம் தாக்கி கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மது பாட்டில் கடத்தியவர் கைது
மயிலம்: கூட்டேரிப்பட்டு, நான்கு முனை சந்திப்பு அருகே மயிலம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து வந்த பைக்கில் மது பாட்டில் கடத்தி வந்த கெங்கபுரம் ராஜ்குமார், 36; என்பவரை கைது செய்து, 18 மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
முன்விரோதம்: 10 பேர் மீது வழக்கு
வானுார்: கிளியனுார் அடுத்த பேராவூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன். அதே பகுதியைச் சேர்ந்தவர் உமாகாந்தன். இரு குடும்பத்தினருக்கும் இடையே இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 11ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இது குறித்து இரு தரப்பு புகாரின் பேரில், ராஜேந்திரன், உமாகாந்தன் உட்பட 10 பேர் மீது கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குட்கா விற்ற 4 கடைகளுக்கு சீல்
விக்கிரவாண்டி: குத்தாம்பூண்டி, பனையபுரம், சோழகனுார் பகுதிகளில் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் அதிகாரி கொளஞ்சி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, குட்கா பாக்கெட்டுகளை விற்ற விக்கிரவாண்டி ஜெயபால், 58; குத்தாம்பூண்டி பாலமுருகன், 40; பனையபுரம் கோகுல், 22; சோழகனுார் முருகன், 47; ஆகியோரது கடைகளில் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து 4 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.
மைத்துனரை தாக்கியவர் கைது
விழுப்புரம்: சென்னகுணம் கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன், 37; இவரது மனைவி சத்யா, 35; சில தினங்களுக்கு முன் இருவருக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த சத்யா அதே கிராமத்தில் உள்ள தனது அண்ணன் மணிவண்ணன், 47; வீட்டில் தங்கினார்.
நேற்று முன்தினம் காலை புருஷோத்தமன், மணிவண்ணனின் வீட்டிற்குச் சென்று, தனது மனைவியை வீட்டிற்கு அனுப்புமாறு கேட்டு தகராறு செய்து மணிவண்ணனை தாக்கினார். புகாரின் பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து, புருஷோத்தமனை கைது செய்தனர்.