/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரைம் செய்திகள்... வேகமாக பைக் ஓட்டியவர் கைது
/
கிரைம் செய்திகள்... வேகமாக பைக் ஓட்டியவர் கைது
ADDED : டிச 31, 2025 02:59 AM
வேகமாக பைக் ஓட்டியவர் கைது வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் மற்றும் போலீசார் சாலை அகரம் பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதிவேகமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வந்த விழுப்புரம், வி.மருதுாரைச் சேர்ந்த பாரதி, 26; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.
மணல் கடத்திய லாரி பறிமுதல் விழுப்புரம் இந்திரா நகர் மேம்பாலம் அருகே, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சுரேஷ்குமார் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தந்தைக்கு மிரட்டல்: மகன் கைது விக்கிரவாண்டி அடுத்த மேல்காரணையைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 70; இவர் 20 ஆண்டுகளுக்கு முன், தனது மகள் அபிராமிக்கு 2 ஏக்கர் நிலம் மற்றும் 3 சென்ட் வீட்டு மனையை எழுதிக் கொடுத்துள்ளார். அதனை தனது பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி கலியபெருமாள் மகன் மோகன், 36; தந்தையை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். அபிராமி கொடுத்த புகாரின் பேரில் மோகனை விக்கிரவாண்டி போலீசார் கைது செய்தனர்.
நா.த.க.,வினர் 8 பேர் மீது வழக்கு திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில தொழிற்சங்க பேரவை துணைச் செயலாளர் ரமேஷ் தலைமையில், விழுப்புரம் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், 32; உள்ளிட்டோர் அரசு பஸ்களில் தமிழ்நாடு ஸ்டிக்கரை ஒட்டினர். இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் பிரபாவதி புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார், ரமேஷ் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
ஒருவரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு திருக்கோவிலுார் அடுத்த ஜி.அரியூரைச் சேர்ந்தவர் விஜயகுமார், 42; இவர், பொலிரோ பிக் அப் சரக்கு வாகனத்தில் புண்ணாக்கு வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரத்தை முடித்துக் கொண்டு, வீட்டிற்கு திரும்பியபோது ஜி.அரியூர் சுடுகாடு அருகே பைக்கில் வந்த 4 பேர் வாகனத்திற்கு வழி விடாமல் ஏன் செல்கிறாய் என கேட்டு தாக்கி மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
தொழிலாளி தற்கொலை கஞ்சனுார் அடுத்த கொரளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயதீபா, 40: கூலித் தொழிலாளி. இவர் தினமும் மது அருந்தி விட்டு வந்ததால் கணவன், மனைவிக்குமிடையே தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த 28ம் தேதி மாலை வேலைக்கு சென்று வீடு திரும்பிய உதயதீபா குடித்து விட்டு வந்ததால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த உதயதீபா துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கஞ்சனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாட்டரி சீ ட்டு விற் ற 2 பேர் கைது திருக்கோவிலுாரில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஐந்து முனை சந்திப்பில் லாட்டரி சீட்டு விற்ற செவலை ரோட்டைச் சேர்ந்த பீமன், 69; என்பவரை கைது செய்தனர். அதேபோல் நான்கு முனை சந்திப்பில் பையூர் கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன், 40; என்பவரை கைது செய்தனர்.

