/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரைம் செய்திகள்... விழுப்புரம்
/
கிரைம் செய்திகள்... விழுப்புரம்
ADDED : மார் 31, 2025 06:15 AM
கிராவல் திருட்டு: லாரி பறிமுதல்
கள்ளக்குறிச்சி புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் ரகுநாத்குமார் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் இரவு தண்டலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியபோது, டிரைவர் தப்பியோடினார்.
லாரியில், 3.5 யூனிட் கிராவல் இருந்தது. லாரி பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
வளவனுார் அடுத்த பூவரசங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகள் திவ்யலோஷனி, 16; கோலியனுார் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
கடந்த 25ம் தேதி பள்ளிக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஓடையில் மூழ்கி பெண் பலி
விழுப்புரம் அடுத்த பொய்யப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசன் மனைவி வீரம்மாள், 57; நேற்று முன்தினம் அதே கிராமத்தில் உள்ள ஓடையில் தவறி விழுந்ததில், நீரில் மூழ்கி இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பஸ்சில் திருட்டு: 2 பேர் கைது
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த பனக்கநல்லுாரைச் சேர்ந்தவர் பார்த்திபன், 22; கடந்த 2 தினங்களுக்கு முன் சேலத்தில் இருந்து, சென்னைக்கு அரசு பஸ்சில் சென்றார். விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வந்தபோது, பஸ்சில் ஏறிய 2 பேர், பார்த்திபனின் சட்டை பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை திருடினர். இருவரையும் பிடித்து விழுப்புரம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ஜெயக்குமார், 40; சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை சுப்ரமணியன், 51; என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பீர் பாட்டிலால் தாக்கியவர் மீது வழக்கு
திருச்சியைச் சேர்ந்தவர் தினேஷ், 30; சென்னை, பல்லாவரம் கார்த்திகேயன், 29; இருவரும், ரயிலில் பிச்சை எடுத்து வந்தனர். கடந்த 27ம் தேதி, விழுப்புரம் ரயில்வே காலனி ரேஷன் கடை அருகே, மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த தினேஷ், கார்த்திகேயனை பீர் பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார், தினேஷ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது காட்டனந்தல் கிராமத்தில், செல்வராசு, 48; என்பவர், வீட்டின் பின்புறம் மது பாட்டில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதேபோல் பெரிய சிறுவத்துார் ஏரிக்கரையில் மது பாட்டில் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த மணி, 35; என்பவரையும் போலீசார் கைது செய்து, 43 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
2 பைக்குகள் கார் மோதி 6 பேர் காயம்
திண்டுக்கல் மாவட்டம், குட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இப்ராஹிம் ஒளி மகன் தாரிக், 26; இவர் இன்னோவா காரை சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஓட்டிச் சென்றார். நேற்று காலை 8:00 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் அருகே சென்றபோது, முன்னால் சென்ற 2 பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது.
இதில் பைக் ஓட்டிச் சென்ற விருத்தாசலம் ரவி, 45; அவரது மனைவி ராஜேஸ்வரி, 38; மற்றொரு பைக்கை ஓட்டிச் சென்ற உளுந்துார்பேட்டை அடுத்த சின்னக்குப்பம் ஹரி கிருஷ்ணன், 40; மற்றும் 2 குழந்தைகள், தாரிக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். திருநாவலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கணவர் மாயம்: மனைவி புகார்
சங்கராபுரம் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தணிகைமலை, 50; விவசாயி. இவருக்கு கடந்த 2017ம் ஆண்டு வாகன விபத்தில் வலது கால் அகற்றப்பட்டது.
இந்நிலையில் வீட்டில் இருந்த தணிகைமலையை காணவில்லை எனவும், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என அவரது மனைவி அஞ்சலை அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.