சாராய ஊறல் அழிப்பு
கள்ளக்குறிச்சி: மத்திய நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி., கந்தசாமி தலைமையில், விழுப்புரம் மண்டல இன்ஸ்பெக்டர் சின்னகாமணன், கள்ளக்குறிச்சி கலால் இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி, மத்திய நுண்ணறிவு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் இனாயத் பாஷா மற்றும் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, சிறுகளூர் தெற்கு ஓடை அருகே சாராயம் காய்ச்சிய நபர்கள் தப்பியோடினர். தொடர்ந்து, அங்கு 29 பேரல்களில் இருந்த சாராய ஊரல்களையும், சாராயத்தையும் கொட்டி அழித்தனர்.
நாட்டுத் துப்பாக்கி: ஒருவர் கைது
உளுந்துார்பேட்டை: செங்குறிச்சி அருகே உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நாட்டுத் துப்பாக்கியுடன் வந்த வாலிபரைப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், செங்குறிச்சியைச் சேர்ந்த விஜயகுமார், 31; எனவும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியை எடுத்துச் சென்று வந்தது தெரிந்தது. உடன் அவரை கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
மகன் மாயம்: தந்தை புகார்
திருவெண்ணெய்நல்லுார்: அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் ஹரி சிவபாலன், 26; இவர், கடந்த 21ம் தேதி இரவு வெளியே சுற்றி விட்டு தாமதமாக வந்துள்ளார். இதனை அவரது தந்தை ராஜலிங்கம் கண்டித்தார். இதனால், கோபித்துகொண்டு வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. ராஜலிங்கம் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சாலை ஆக்கிரமிப்பு: பெண் மீது வழக்கு
விழுப்புரம்: மேற்கு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார், கிழக்கு பாண்டி ரோட்டில், பொதுமக்களுக்கு இடையூறாக கடை வைத்திருந்தவர்களை அப்புறப்படுத்தினர். அங்கு தள்ளுவண்டியில் பூ கடை வைத்திருந்த ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தி மனைவி பரமேஸ்வரி, 50; என்பவரின் கடையை அகற்றி, அவர் மீது வழக்குப் பதிந்தனர்.
பூச்சி மருந்து குடித்தவர் சாவு
விழுப்புரம்: கலிஞ்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன், 50; கூலித் தொலிலாளி. சர்க்கரை நோயால் பாதித்து அவதிப்பட்டு வந்தார். இதனால், மனமுடைந்த அவர் கடந்த 21ம் தேதி பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் 26ம் தேதி இறந்தார். வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
சிறுமி கடத்தல்: வாலிபர் மீது வழக்கு
விழுப்புரம்: பெரியதச்சூரைச் சேர்ந்தவர் ராஜ் மகன் திலீப்ராஜ் (எ) ரூபேஷ், 19; இவர், 17 வயது சிறுமியை கடந்த 26ம் தேதி கடத்திச் சென்றதாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் திலீப்ராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஆன்லைன் லாட்டரி: 2 பேர் கைது
விழுப்புரம்: சாலாமேடு பகுதியில் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில், ஆன்லைன் லாட்டரி விற்ற கே.கே.,ரோடு, இந்திரா நகரைச் சேர்ந்த முபாரக் அலி, 41; வி.மருதுார் மகேஷ், 36; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
பஸ் - லாரி மோதல்: 4 பேர் காயம்
திண்டிவனம்: சிவகங்கையில் இருந்து தனியார் சொகுசு பஸ் 40 பயணிகளுடன் நேற்று காலை 7:00 மணிக்கு திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கூட்ரோடு அருகே வந்தபோது, சென்னையில் இருந்து வந்த லாரி, மீது பஸ் மோதியது. இதில், பஸ் மாற்று டிரைவர் ராமநாதபுரம் சிங்காரவேலன், 32; டிரைவர் சிவகங்கை கண்ணன், 38; கண்டக்டர் புதுக்கோட்டை இருதயம், 42; லாரி டிரைவர் நீலகிரி சுரேஷ்குமார், 37; ஆகியோர் படுகாயமடைந்தனர் பஸ் பயணிகள் காயமின்றி தப்பித்தனர். ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மதுபாட்டில் கடத்தியவர் கைது
வானுார்: கிளியனுார் சோதனைச் சாவடியில் மதுவிலக்கு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் சென்ற ஹோண்டா காரை சோதனை செய்தனர்.
அதில், 30 அட்டைப் பெட்டிகளில் 1.60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் ஆந்திரா மாநிலத்திற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த ஆந்திராவைச் சேர்ந்த சேதுகுமார் ரெட்டி, 50; என்பவரை கைது செய்து கார் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விஷம் குடித்து ஒருவர் தற்கொலை
திருக்கோவிலுார்: தகடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 44; முதல் மனைவி இறந்ததால் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட மனைவியும் இறந்தார். இதனால், மனவேதனையில் இருந்த ஏழுமலை நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடன், திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.