பெண்ணிடம் அத்து மீறியவர் கைது
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த திருமுண்டீச்சரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார், 36; இவர், கடந்த 14ம் தேதி நள்ளிரவு வீட்டில் துாங்கிய 34 வயது திருமணமான பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். அந்த பெண் கூச்சலிட்டதும் அய்யனார் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினார்.
இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து அய்யனாரை கைது செய்தனர்.
ரயில் மோதி பெண் பலி
விழுப்புரம்: வண்டிமேடு விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி கஸ்துாரி, 48; மனநிலை பாதித்தவர். இவர், நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு மேல் வண்டிமேடு பகுதியில் உள்ள தண்டவாளத்தைக் கடந்தார்.
அப்போது திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் கஸ்துாரி இறந்தார். விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மது விற்ற 4 பேர் கைது
திருவெண்ணெய்நல்லுார்: சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் பாவந்துார் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த சிவநாராயணன், 35; என்பவரை கைது 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அருங்குறுக்கை கிராமத்தில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல், 45; ராமலிங்கம், 50; ஆகிய இருவரையும் கைது செய்து தலா 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், சித்தலிங்கமடம் பகுதியில் மது பாட்டில் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த தண்டபாணி, 60; என்பவரை கைது செய்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மகள் மாயம்: தந்தை புகார்
திருவெண்ணெய்நல்லுார்: பெண்ணைவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் மகள் மகாலட்சுமி, 27; இவரை கடந்த 14ம் தேதி முதல் காணவில்லை. அவரது தந்தை வீரன் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வயிற்று வலி: சிறுமி தற்கொலை
விழுப்புரம்: விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந்தவர் கந்தன் மகள் விஜயலட்சுமி, இவர் விழுப்புரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்றார். வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்த இவர், நேற்று முன்தினம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாலிபரை தாக்கியவர் கைது
விழுப்புரம்: திருப்பச்சாவடிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன், 33; இவர் தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்கிறார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன், 39; இவருக்கு 3,000 ரூபாய்க்கு பூண்டு மூட்டைகளை கடந்த 6 மாதங்களுக்கு முன் குமரேசன் கொடுத்துள்ளார். இந்த பணத்தை கேட்ட போது குமரேசனை வீரராகவன், அவரது தம்பி பன்னீர் ஆகிய இருவரும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். விழுப்புரம் தாலுகா போலீசார் வீரராகவன், பன்னீர் ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிந்து வீரராகவனை கைது செய்தனர்.