ADDED : ஜூலை 06, 2025 04:35 AM
கார் மோதி மூதாட்டி பலி
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்தானங்கூரைச் சேர்ந்தவர் ராஜி மனைவி சந்திரா, 50; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை வழியாக சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ கார் சந்திரா மீது மோதியது. படுகாயமடைந்த அவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று அதிகாலை 3:15 மணியளவில் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பேரங்கியூரைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் பாண்டியன், 29; இவர் கடந்த மாதம் 26ம் தேதி இரவு 7:30 மணியளவில் அரசூர் - திருவெண்ணெய்நல்லுார் சாலையில் பைக்கில் சென்றார். அப்போது திடீரென மயங்கி பைக்கிலிருந்து கீழே விழந்து படுகாயமடைந்தார். உடன் சென்னை, ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் மாலை இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மனைவி மாயம்: கணவர் புகார்
விழுப்புரம் அடுத்த கெங்கராம்பளையம் மல்ராஜன்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மனைவி சத்யா, 29; திருமணமாகி 6 மாதம் ஆகிறது. இருவருக்கும் இடையே, குடும்ப பிரச்னையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், கடந்த 2ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சத்யா, வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபரை தாக்கியவர் கைது
விழுப்புரம், திடீர்குப்பத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் சஞ்சீவிகுமார், 23; இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்றார். அங்கிருந்த தோகைபாடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் ராகுல், 22; திடீர்குப்பத்தைச் சேர்ந்த ஆகாஷ், அகிலன், தயா, சக்தி ஆகியோர் சஞ்சீவிகுமாரிடம் தகராறு செய்து தாக்கினர். இதையறிந்த உறவினர்கள் ஜோதி, பாரதி ஆகியோர் தடுத்த போது, அவர்களையும் தாக்கினர். விழுப்புரம் டவுன் போலீசார் 5 பேர் மீது வழக்குப் பதிந்து ராகுலை கைது செய்தனர்.
மைத்துனரை தாக்கியவர் கைது
விழுப்புரம் அடுத்த அயினம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை பாண்டியன், 40; இவரது தங்கை தமிழரசியின் கணவர் விமல்ராஜ், 30; இவர், மனைவி வீட்டோடு மாப்பிள்ளையாக கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். நேற்று முன்தினம் இதை தட்டிக்கேட்ட துரைபாண்டியனை, விமல்ராஜ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

