ADDED : ஜூலை 07, 2025 02:08 AM
கார் மோதி மூதாட்டி பலி
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சித்தானங்கூரைச் சேர்ந்தவர் ராஜி மனைவி சந்திரா, 50; கூலித்தொழிலாளி. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சாலையோரம் நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக வந்த கார் சந்திரா மீது மோதியது. படுகாயமடைந்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் அதிகாலை இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மனைவி மாயம்: கணவர் புகார்
விழுப்புரம் அடுத்த கெங்கராம்பளையம் மல்ராஜன்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மனைவி சத்யா, 29; திருமணமாகி 6 மாதம் ஆகிறது. இருவருக்கும் இடையே, குடும்ப பிரச்னையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி வெளியே சென்ற சத்யா, வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கஜேந்திரன் புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாலிபரை தாக்கியவர் கைது
விழுப்புரம், திடீர் குப்பத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் சஞ்சீவிகுமார், 23; கடந்த இரு தினங்களுக்கு முன், அதே பகுதி பெட்டிக்கடைக்கு சென்றார்.
அங்கிருந்த தோகைபாடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் ராகுல், 22; திடீர்குப்பத்தைச் சேர்ந்த ஆகாஷ், அகிலன், தயா, சக்தி ஆகியோர் சஞ்சீவிகுமாரிடம் தகராறு செய்து தாக்கினர். இதையறிந்த உறவினர்கள் ஜோதி, பாரதி ஆகியோர் தடுத்த போது, அவர்களையும் தாக்கினர். விழுப்புரம் டவுன் போலீசார் 5 பேர் மீது வழக்குப் பதிந்து ராகுலை கைது செய்தனர்.