அடையாளம் தெரியாதவர் சாவு கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு அடுத்த எல்லத்தரசு வாலிபால் கிரவுண்ட் அருகே நேற்று முன்தினம், 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீசார் நேரில் சென்று, முதியவரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. கீழ்புத்துப்பட்டு வி.ஏ.ஓ., மகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இளம்பெண் மாயம் விழுப்புரம் அடுத்த பிடாகத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி சுப்புலட்சுமி, 24; இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி குழந்தை இல்லை. கடந்த 10 நாட்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கோபித்துக்கொண்டு பொய்யப்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
குளவி கொட்டி மூதாட்டி பலி விழுப்புரம் அடுத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கோபால் மனைவி சுபத்திரை, 70; இவர், அப்பகுதியில் உள்ள ஒரு நிலத்தின் அருகே நடந்து சென்றபோது குளவி கொட்டியது. இதில், மயக்கமடைந்த அவர், புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மது பாட்டில் விற்றவர் கைது சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மணி கண்டன் தலைமையிலான போலீசார் நேற்று காலை 11:00 மணியளவில் பங்காரம் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பங்காரம், காட்டுக்கொட்டாய் பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் கிருஷ்ணமூர்த்தி, 26; என்பவரை கைது செய்து, 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

