ADDED : செப் 11, 2026 10:55 PM
கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஒன்றியம் கொடுக்கூர் கிராமத்தில் ஆத்மா திட்டம் மூலம் நெற்பயிரில் சூழலியல் சார்ந்த பயிர் பகுப்பாய்வு பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் அலுவலர் விஜய் தலைமை தாங்கினார்.
வட்டார தொழில் நுட்ப மேலாளர் தேன்மொழி வரவேற்றார். திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் செந்தமிழ், ‘நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் வயல் சூழலை (பயிர் வளர்ச்சி, வானிலை, பூச்சிகள் மற்றும் இயற்கை எதிரிகள்) வாரந்தோறும் உற்று நோக்கி பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் நன்மை செய்யும் பூச்சிகளைக் கொண்டே பூச்சிகளை கட்டுப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.
மேலும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் சுதா வேளாண் திட்டப் பணிகள் வேளாண் மானியங்கள் பற்றியும் சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் தெளிப்பு நீர் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
உதவி தொழில் நுட்ப மேலாளர் வீரமணி நன்றி கூறினார். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் அருள்பாபு செய்திருந்தார்
