/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அறுவடை காலத்தில் திடீர் மழையால் வெள்ளரி விளைச்சல் பாதிப்பு.
/
அறுவடை காலத்தில் திடீர் மழையால் வெள்ளரி விளைச்சல் பாதிப்பு.
அறுவடை காலத்தில் திடீர் மழையால் வெள்ளரி விளைச்சல் பாதிப்பு.
அறுவடை காலத்தில் திடீர் மழையால் வெள்ளரி விளைச்சல் பாதிப்பு.
ADDED : ஏப் 15, 2025 04:55 AM

விழுப்புரம் மாவட்டத்தில் நெல், கரும்பு, மரவள்ளி, மணிலா உள்ளிட்ட வழக்கமான பயிர்களுடன், தோட்டப் பயிர்கள், மலர்கள், பழங்கள் என மாற்று பயிர்களிட்டு வருகின்றனர். தற்போது, விழுப்புரம் மாவட்டத்தில் பாணாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், கோணங்கிப்பாளையம், ஆனாங்கூர், காணை, வளவனூர் வட்டாரங்களிலும் அதிகளவில் வெள்ளரி பயிர்களிட்டு வருகின்றனர். மாவட்டம் முழுதும் 200 ஏக்கர் அளவில் வெள்ளரி பயிர்களிட்டுள்ளனர்.
மணல் பாங்கான நிலம், நீரோட்டமுள்ள பகுதிகளில் அதிகம் வெள்ளரி பயிரிடுகின்றனர். நிலத்தை உழவு செய்து, தை மாதத்தில் விதைப்பு செய்கின்றனர். மூன்று மாதங்களில் வெள்ளரி கொடிகளாக வளர்ந்து, பூ பூத்து பிஞ்சுகள் வருகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் வெள்ளரி பிஞ்சுகளை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். ஒரு மாத காலத்திற்கு பிறகு ஏப்ரல் மாதங்களில் வெள்ளரி பழங்களை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
மார்ச் முதல் மே வரை வெள்ளரி பிஞ்சு, வெள்ளரி பழங்கள் தொடர்ந்து அறுவடை நடக்கும். விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கடலூர், புதுச்சேரி மாவட்ட பகுதிக்கு அதிகளவில் விற்பனைக்கு செல்கிறது. கோடை வெயிலுக்கு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ள பயிராக இருந்து வருகிறது.
இந்தாண்டு விழுப்புரம் சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான விவசாயிகள் வெள்ளரி பயிரிட்டு, கடந்த மாதத்திலிருந்து வெள்ளரி பிஞ்சுகளை அறுவடை செய்து அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில், மார்ச் இறுதியிலும், ஏப்ரல் மாத தொடக்கத்தில் திடீரென 3 நாட்கள் மழை பெய்ததால் வெள்ளரி விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 நாட்கள் பெய்த திடீர் மழையாலும், வெள்ளரி தோட்டங்கள் பாதிக்கப்பட்டன.
தோட்டத்தில் மழை நீர் தேங்கியதால், தோட்டத்தில் படர்ந்து பழுத்திருந்த வெள்ளரி பழங்கள் தரையில் அழுகி வீணாகியது. ஏற்கனவே பிஞ்சு பருவத்தில் பெய்த மழையால், வெள்ளரி கொடிகள், தழைகள் பழுத்து வீணாகியது. இதனால், பிஞ்சு விளைச்சலும் பாதித்தது. வெள்ளரி பழம் பழுக்கும் நிலையில், கடும் வெயிலும், திடீர் மழையும் என வந்ததால், பழங்கள் அழுகி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, வெள்ளரி பழங்கள் விளைச்சல் குறைந்துள்ளது. நிலங்களை குத்தகைக்கு எடுத்து வெள்ளரி பயிரிட்ட விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.