/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'பெஞ்சல்' புயல் எச்சரிக்கை எதிரொலி; முக்கிய சாலைகள், பஸ் நிலையம் 'வெறிச்'
/
'பெஞ்சல்' புயல் எச்சரிக்கை எதிரொலி; முக்கிய சாலைகள், பஸ் நிலையம் 'வெறிச்'
'பெஞ்சல்' புயல் எச்சரிக்கை எதிரொலி; முக்கிய சாலைகள், பஸ் நிலையம் 'வெறிச்'
'பெஞ்சல்' புயல் எச்சரிக்கை எதிரொலி; முக்கிய சாலைகள், பஸ் நிலையம் 'வெறிச்'
ADDED : டிச 01, 2024 06:19 AM

விழுப்புரம், : வங்கக்கடலில் உருவாகியுள்ள 'பெஞ்சல்' புயல் காரணமாக, விழுப்புரத்தில் முக்கிய சாலைகள் வெறிச்சோடியது.
வங்கக்கடலில் உருவாகி நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. 'பெஞ்சல்' என்கிற இந்த புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
நேற்று அதிகாலை முதல் விழுப்புரம் நகர பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் காற்றுடன் தொடர்ந்து மழை பெய்தது. விழுப்புரம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கிழக்கு பாண்டி ரோடு, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு பகுதிகளிலும், பிற்பகல் 1:30 மணி வரை தொடர்ந்து லேசான மழை பெய்தது.
தொடர் மழையால் தாழ்வான பகுதிகளிலும், குடிசைப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக சாலையின் மையப்பகுதியில் இருந்த மரம் திடீரென சாய்ந்தது. உடனடியாக மரம் அப்புறப்படுத்தப்பட்டது.
விழுப்புரம் மட்டுமின்றி, திண்டிவனம், வளவனுார், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனுார், கண்டாச்சிபுரம், திருவெண்ணெய்நல்லுார் பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்தது.
இதனால், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி, கடை வீதிகள், முக்கிய சாலைகள் வெறிச்சோடியது. கனமழை காரணமாக பொதுமக்கள் வெளியூர் பயணத்தை தவிர்த்து விட்டனர். இதனால், பஸ் நிலையத்தில், பஸ்கள் மற்றும் பயணிகள் இன்றி காணப்பட்டது.
மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் நேற்று காலை முதல் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மரக்காணம் சால்ட் ரோடு பகுதியில் சூறைக் காற்றில் சாய்ந்த மரம், உடனடியாக அகற்றப்பட்டது.
புயலால் பாதிப்பு எச்சரிக்கை காரணமாக, 19 மீனவ கிராம மக்கள், மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள 12 பேரிடர் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மரக்காணம் பகுதியில் கனமழையால், 50 நரிக்குறவக் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். இவர்களை பாதுகாப்பாக மீட்டு, போலீஸ் வாகனத்தின் மூலம் மரக்காணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தங்க வைத்தனர். அங்கு, உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, மரக்காணம்பகுதி மீனவர்கள் 5வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. அவர்களது இயந்திர மற்றும் விசைப்படகுகள் பாதுகாப்பான இடங்களில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.