விதிமீறி வைக்கும் பேனர்களால் விபத்து அபாயம்: கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை தேவை
விதிமீறி வைக்கும் பேனர்களால் விபத்து அபாயம்: கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை தேவை
UPDATED : செப் 20, 2026 06:02 PM
ADDED : செப் 20, 2026 04:11 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், விதிகளை மீறி வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களால் விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்வதைத் தடுக்க கடும் கட்டுப்பாடு விதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் நகர பகுதிகள், பேரூராட்சி, கிராம பகுதிகள் வரை, அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் தொடங்கி பிறந்தநாள், திருமண விழா, அஞ்சலி தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கும் கலாசாரம் அதிகரித்துள்ளது.
இத்தகைய டிஜிட்டல் பேனர்கள், விதிமுறைகளை பின்பற்றாமல், நகரப் பகுதியின் முக்கிய சாலைகள், சாலை சந்திப்புகள், மின் கம்பங்கள், பஸ் நிறுத்த பகுதிகள், சாலையோர மரங்கள் என அனைத்தையும் ஆக்கிரமித்து வைக்கப்படுகிறது. இப்படி தொடர்ச்சியாக போட்டி போட்டு வைக்கப்படுவதால், நிரந்தரமாகவே சாலையோரங்களை பேனர் வைப்பவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
விழுப்புரம் கே.கே.ரோடு கணபதி நகர் சந்திப்பில், ஹைமாஸ் விளக்கு கம்பத்துடன் உயரமாக வைத்திந்த டிஜிட்டல் பேனரை, நேற்று காலை வாலிபர்கள் கழற்றி விட்டு, புதிதாக பிறந்தநாள் விழாவுக்கு பேனர் கட்ட முயன்றபோது, அந்த டிஜிட்டல் பேனர் எச்.டி., லைன் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வி.மருதுாரைச் சேர்ந்த மதன்குமார், 28; என்பவர் இறந்தார். வாஞ்சிநாதன், கதிர்வேல், பூவரசன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதே போல், விழுப்புரம் சிக்னல் சந்திப்பு, கிழக்கு பாண்டிரோடு, முத்தாம்பாளையம் பைபாஸ் சந்திப்புகளில் வைத்த பேனர்கள் விழுந்து விபத்துகள் ஏற்படுகிறது.
விழுப்புரத்தில், அனைத்து சாலை சந்திப்புகளிலும், பிரதான மெயின் ரோடுகளிலும், எப்போதும் டிஜிட்டல் பேனர்கள் ஆக்கிரமித்துள்ளன. விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சந்திப்பில், சென்னை, திருச்சி, திருக்கோவிலுார் சாலை சந்திப்புகளிலும், தொடர்ச்சியாக கட்சி பேனர்கள், பிறந்த நாள், விளையாட்டு, சுப நிகழ்ச்சிகளுக்கான பேனர்களும் அணிவகுத்துள்ளன.
விழுப்புரத்தில் சிக்னல் பகுதி துணைமின் நிலையத்திலிருந்து, உயர் அழுத்த மின் பாதைகள் பல பகுதிகளுக்கும் பிரிந்து செல்கிறது. அந்தப்பகுதியில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள் அடிக்கடி காற்று மழையின் போது, உயரழுத்து மின் கம்பிகள் மீது பட்டு விபத்து ஏற்படுவதும், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மீதும் ஏராளமான முறையில் விழுந்து விபத்துகளை ஏற்படுத்தியுள்ளது.
கலெக்டர் பெருந்திட்ட வளாகம் எதிரேவும், புதிய பஸ் நிலையம், நகராட்சி திடல் சந்திப்பு பகுதிகளிலும், பழைய பஸ் நிலையம் அம்பேத்கர் சிலை, பெட்ரோல் பங்க் போன்றவற்றை மறைத்து வைப்பதால் விபத்துகளும், மோதல்களும் ஏற்படுகிறது.
காந்தி சிலை சந்திப்பு, ரயில்வே மேம்பாலம் வாயில் பகுதி, கிழக்கு பாண்டி ரோடு மாதா கோவில், சவிதா தியேட்டர் சந்திப்புகளிலும், கோலியனுார் கூட்ரோடு பகுதியிலும் நான்கு புறங்களில் பேனர்கள் வைக்கப்படுகிறது.
இந்த பேனர்கள், தொடர்ச்சியாக அனுமதியின்றி வைக்கப்படுவதால், ஒரு வாரம் காலம் வரை அப்புறப்படுத்தாமல் வைத்துள்ளனர். ஒரு சில நேரங்களில் அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்கள் காற்றில் கிழிந்தால் கூட யாரோ கிழித்து விட்டதாக கூறி சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி இல்லை. விழுப்புரத்தில் சில ஆண்டுகளுக்கு முன், டிஜிட்டல் பேனர்களால் விபத்தும், மோதல்களும் ஏற்பட்டதால் பொது இடங்கள், சாலை சந்திப்புகளில் வைக்கக் கூடாது என காவல்துறை விதிமுறைகளை வகுத்தனர்.
அதன்படி, பேனர் வைப்பதற்கு, அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள், காவல் நிலையங்களில் அனுமதி பெற்று வைக்கவும், 3 நாட்களுக்குள் அதனை அகற்றி விட வேண்டும், பேனர் வைப்பவர், அச்சிடுவோர் விபரங்களை குறிப்பிடவும் தெரிவித்திருந்தனர்.
இதனை போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடாததால் வழக்கம் போல் காணும் இடங்களில் எல்லாம் டிஜிட்டல் பேனர் மயமாகி, மின் விபத்துகளும் சாலை விபத்துகளும் தொடர்கிறது. முக்கிய இடங்களுக்கு தடையையும், கடும் கட்டுப்பாட்டையும் விதிக்க வேண்டும்.
