பழைய, புதிய பஸ் நிலையங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பு... குறைபாடு!பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா?
பழைய, புதிய பஸ் நிலையங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பு... குறைபாடு!பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா?
UPDATED : மே 18, 2026 04:09 PM
ADDED : மே 18, 2026 04:00 PM

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள 2 பஸ் நிலையங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. போலீசாரும் பஸ் நிலையத்திற்குள் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபடாததால் சமூக விரோதிகளின் சாம்ராஜியமாக மாறியுள்ளது.
விழுப்புரம் நகரில் உள்ள பழைய பஸ் நிலையம் கிராமப்புற மக்களுக்கு முக்கிய சந்திப்பாகவும், புதிய பஸ் நிலையம் அனைத்து மாவட்ட, மாநில பயணிகளின் முக்கிய சந்திப்பாகவும் உள்ளது. இந்த இரு பஸ் நிலையங்களும் நகராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
புதிய பஸ் நிலையத்தில், பயணிகளுக்கான குடிநீர், கழிவறை மட்டுமின்றி கடைகளும் உள்ளது. இந்த குடிநீர், கழிவறை வசதிகள் போதிய அளவில் நகராட்சி நிர்வாகம் பராமரிக்காததால் மிகவும் அசுத்தமாக உள்ளது. பழைய பஸ் நிலையம் வளாகம் முழுவதும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடாக உள்ளது.
இரு பஸ் நிலையங்களிலும் போலீசார், கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவது கிடையாது.
மேலும், பழைய பஸ் நிலையத்தில் பொறுத்தப்பட்டுள்ள 13 கண்காணிப்பு கேமராக்களில் முக்கிய இடங்களில் பொறுத்தப்பட்டுள்ள 8 கேமராக்கள் வேலை செய்யவில்லை.
இதே போன்று புதிய பஸ் நிலையத்தில், 24 கேமராக்கள் உள்ள நிலையில் முக்கியமாக சென்னை - திருச்சி மார்க்க பஸ்கள் நிறுத்துமிடம், பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியே செல்லும் இடங்கள், நடைமேபடை உள்ளிட்ட இடங்களில் பொறுத்தப்பட்டுள்ள 14 கேமராக்கள் வேலை செய்யவில்லை.
கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாததால் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
புதிய பஸ் நிலையம் வளாகம் மட்டுமே பெரிதாக காணப்படுகிறது. இங்குள்ள பயணிகளுக்கு சுத்தம், சுகாதாரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
புதிய பஸ் நிலையத்திற்குள் பயணிகள் சென்றால் துர்நாற்றத்தில் சிக்கி சிரமப்படுகின்றனர். மேலும், பயணிகள் உட்காரும் கட்டையில் ஒரு சிலர் தங்களின் உடைமைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். மேலும், போதை ஆசாமிகள் பயணிகளிடம் வம்பிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது.
பயணிகள் நடந்து செல்லும் நடைமேடையில் இருசக்கர வாகனங்கள் பார்க்கிங், பஸ்கள் நிற்கும் கட்டையில் கூட இருசக்கர வாகனங்களை ஒரு சிலர் பார்க்கிங் செய்துள்ளனர்.
இங்குள்ள, புறநகர் போலீசார் கூட பஸ் நிலையத்தில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதில்லை. இந்த இரு பஸ் நிலையங்களும் விழுப்புரம் மேற்கு போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் வந்தாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை.
இதனால், பஸ் நிலையத்தில் பிக் பாக்கெட், செயின் பறிப்பு என சமூக விரோதிகளின் சாம்ராஜியமாக பஸ் நிலையம் மாறி வருகிறது.
பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல், அடிப்படை வசதிகள் இல்லாததது குறித்து பஸ் நிலையங்களில் நகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து ஆய்வு செய்ய வேண்டும். பயணிகளுக்கான வசதிகளையும், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அனைத்து கேமராக்களும் இயங்கவும், பயணிகளை பாதுகாப்பையும் உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
