/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெஞ்சல் புயலின் போது கன மழை பெய்தும் செஞ்சியிலுள்ள நவாப்பு குளம் நிரம்பவில்லை
/
பெஞ்சல் புயலின் போது கன மழை பெய்தும் செஞ்சியிலுள்ள நவாப்பு குளம் நிரம்பவில்லை
பெஞ்சல் புயலின் போது கன மழை பெய்தும் செஞ்சியிலுள்ள நவாப்பு குளம் நிரம்பவில்லை
பெஞ்சல் புயலின் போது கன மழை பெய்தும் செஞ்சியிலுள்ள நவாப்பு குளம் நிரம்பவில்லை
ADDED : டிச 31, 2024 06:33 AM

செஞ்சி பேரூராட்சி அருகே உள்ள நவாப்பு குளத்திற்கு தண்ணீர் வரும் வழியை மூடி வைத்திருப்பதால் புயலின் போது கனமழை பொழிந்தும் குளம் நிரம்ப வில்லை.
செஞ்சி போரூராட்சி அலுவலகத்திற்கு தெற்கில் நவாப்பு குளம் உள்ளது. 310 ஆண்டுகளுக்கு முன் ஆற்காட்டு நவாப் ஆட்சியின் போது இந்த குளத்தை வெட்டியுள்ளனர். இதற்கான தண்ணீரை செஞ்சியில் உள்ள ராணிக்கோட்டையின் அடிவாரத்தில் உள்ள அகழிகளிலிருந்து குளத்திற்கு வருவதற்கு தனியாக வாய்க்கால் இருந்தது. மழையின் போது வெள்ள நீர் குளத்திற்கு வந்து குளம் நிரம்பி வந்தது.
இந்த குளத்திற்கு அருகே வாரச்சந்தை நடைபெறும் சந்தை மேடு உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் சந்தைக்கு வந்த பொது மக்களும், வியாபாரிகளும் இந்த குளத்து நீரை குடித்து, உணவை சாப்பிட்டனர். குளத்தை சுற்றி இருந்த வீடுகளிலும் இந்த நீரை குடிநீராகவும், உணவு சமைக்கவும் பயன்படுத்தினர்.
நாளடைவில் மலையில் இருந்து குளத்துக்கு தண்ணீர் வந்த வாய்க்கால் சாக்கடை வாய்க்காலாக மாறியது. இதனால் குடிநீராக இருந்த குளம் நாளடைவில் மாசடைந்து குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றது. ஆனால் இந்த குளம் நிரம்பினால் இதை சுற்றி உள்ள அனைத்து போர்களிலும், கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து ஆண்டு முழுவதம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.
இந்த குளத்தை 14 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்க முற்பட்ட போது தி.மு.க., அ.தி.மு.க., இடையே பிரச்சனை ஏற்பட்டு வேலை நின்றது. இந்த பணி அ.தி.மு.க.,வால் நிறுத்தப்பட்டது என்பதற்கு அடையாளமாக இன்று வரை தி.மு.க., ஆட்சி மாறிய பிறகும் சரி செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளனர். அத்துடன் குளத்திற்கு தண்ணீர் வரும் வழியையும் மூடி விட்டனர்.
இதனால் பெஞ்சல் புயலின் போது செஞ்சி மற்றும் சுற்றி உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி, சங்கராபரணி ஆற்றில் பெரு வெள்ளம் சென்ற போதும் நவாப்பு குளம் நிரம்ப வில்லை.
ஏரிகள் நிரம்பியதாலும், சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் சென்றதாலும் குளத்தில் தானாக ஊற்றெடுத்து தற்போது 30 சதவீதம் தண்ணீர் உள்ளது. இதிலும் ஆகாய தாமரைகள் வளர்ந்து தண்ணீர் அசுத்தமானதாக மாறி வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள கிணறு, போர்களின் தண்ணீரும் கெடும் அபாயம் உள்ளது.
எனவே இந்த குளத்தின் கட்டுமானத்தை சரி செய்து, மழையின் போது வெள்ளம் குளத்துக்கு வருவதற்கு பேரூராட்சி நிர்வாகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செஞ்சி நகர பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.