UPDATED : அக் 17, 2026 10:06 PM
ADDED : அக் 17, 2026 10:04 PM

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் விதத்தில், கடந்த, 2024–25 மற்றும் 2025–26ம் ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
விழுப்புரம் நகராட்சியில், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், கடந்த, 2024 முதல் 2026ம் ஆண்டு வரை, 38.45 கி.மீ., நீளத்திற்கு, 229 தார் சாலைகள், ரூ.16.29 கோடியில் நடந்துள்ளன.
2025–26ம் ஆண்டு 2.27 கி.மீ., தொலைவிற்கு 13 தார்சாலைகள், ரூ.40 லட்சத்தில் போடப்பட்டது. கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் 2024–26ம் ஆண்டில் 9.5 கி.மீ., நீளத்திற்கு 95 தார் சாலைகள் ரூ.6.47 கோடியில் போடப்பட்டுள்ளன.
15வது மத்திய குழு நிதியில், 2024–26ம் ஆண்டுகளில், 9 கி.மீ., நீளத்திற்கு 51 தார் மற்றும் சிமெண்ட் சாலைகள் ரூ.4.29 கோடியில் போடப்பட்டுள்ளன. 15 வது மத்திய குழு நிதி சுகாதார திட்டத்தில் கடந்த, 2024–25ம் ஆண்டுகளில் ரூ.3.5 கோடியில், நகர் நல வாழ்வு மைய கட்டடமும், ரூ.75 லட்சம் மதிப்பில் மற்றொரு நகர் நல வாழ்வாதார மையமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
பள்ளி மேம்பாட்டு கட்டமைப்பு நிதியில் கடந்த, 2024–25ம் ஆண்டில், நகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ரூ.1 கோடி 4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டன.
2025–26ம் ஆண்டுகளில் 9 புதிய அங்கன்வாடி கட்டடங்கள் ரூ.91.50 லட்சத்தில் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
2024–26ம் ஆண்டுகளில் 5 பள்ளிகள் ரூ.90 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 15வது மத்திய குழு நிதியில் 2024–25ம் ஆண்டில், பாதாள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில், ரூ.3.8 கோடியில் பராமரிப்பு பணிகள் நடந்துள்ளன.
ரூ.4.60 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப்பணியும் நடந்துள்ளது. ரூ.9.18 கோடியில் மழை நீர் வடிகால் மற்றும் பைப் லைன் புனரமைப்பு பணி நடந்துள்ளது.
விழுப்புரம் நகராட்சி பழைய அலுவலகம் 2025–26 நிதியாண்டில் திருமண மண்டபமாக ரூ.1.48 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டுள்ளது.
எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 2026ம் ஆண்டில் 6 புதிய அரசு கட்டடங்கள் ரூ.82 லட்சம் மதிப்பிலும், விழுப்புரம் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் 2024–26ம் ஆண்டில் 7 ரேஷன் கடைகள் மற்றும் அரசு கட்டடங்கள் ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ளன.
விழுப்புரம் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட, 5 விரிவாக்கப்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ரூ.251.61 கோடியில் நடந்துள்ளன.
தொடர்ந்து, கலெக்டர் ஷேக் அப்துல்ரஹ்மான் மேற்பார்வையில், வளர்ச்சிப் பணிகள் நடந்து வருவதாக நகராட்சி சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, ஆணையர் சியாமளா ஆகியோர் தெரிவித்தனர்.
