/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பக்தர்கள் குவியும் பங்குனி உத்திரம்
/
பக்தர்கள் குவியும் பங்குனி உத்திரம்
ADDED : ஏப் 11, 2025 06:35 AM

பக்தர்கள் குவியும் பங்குனி உத்திரம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்ற பாடல் வரிகளை அவலுார்பேட்டை பங்குனி உத்திர விழாவில் நேரில் காணலாம். 102 ஆண்டுகளாக நடந்து வரும் விழா இப்பகுதியில் மிக பெரிய விழாவாக மெய்சிலிக்க வைக்கும் பக்தி பரவசத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடுகின்றனர். மூலவர் அபிஷேக ஆராதனை, சக்திவேல், காவடி அபிஷேகமும், 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர், டிராக்டர், மாட்டு வண்டி மற்றும் கல் உருளைகளை இழுத்தும், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்தும் மாடவீதி வழியாக வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.
பால்சுனை
சித்தகிரி மாமலையின் மீது வற்றாத பால்சுனை உள்ளது. இதில் நீரெடுத்து தினமும் சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர். உடலில் ஏற்படும் மரு நீங்க வேண்டி கொள்ளும் பக்தர்கள் மருக்கள் குணமடைந்ததும் வெல்லம், மிளகு ஆகியவற்றை நேர்த்தி கடனாக பால் சுனையில் போட்டு பிரார்த்தனையை நிறைவு செய்கின்றனர்.
சித்தகிரி அந்தாதி
வாழலாம் கண்டீரிவ் வையத்தே நும்வினைகள்
தாழலாம் கண்டீர் தருணமிதே சூழுவளூர்
சித்தர் கிரிவாழும் சீர் சுப்ர மாமணியைச்
சித்த மதிர் கொண்டாற் சிறந்து.”
என்று சித்தகிரி அந்தாதியில் இத்தல முருகனைப்பற்றி குறிப்பிடுப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்
இத்திருக்கோயில் வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், தைக்கிருத்திகை ஆகிய உற்சவங்களுடன், 14 நாட்கள் பங்குனி உத்திர பெருவிழா வெகு விமர்சையாகவும் நடந்து வருகிறது. பங்குனி உத்திர விழாவின் போது பல இடங்களில் பக்தர்கள் அன்னதானம், நீர், மோர் வழங்கி வருகின்றனர்.
தமிழ் வளர்க்கும் விழா:
சித்தகிரி கோவிலில் நடக்கும் பங்குனி உத்திர விழா அவலுார்பேட்டை மக்களுக்கு பெருமை சேர்த்து வருகிறது. விழாவின் போது 14 நாட்கள் தமிழ் அறிஞர்கள், பேச்சாளர்கள், சிறப்பு பட்டிமன்றம், ஆன்மீக சொற்பொழிவு என இலக்கிய விருந்துடன், தமிழ் வளர்க்கும் அறப்பணியையும் செய்து வருகின்றனர். பல நுாற்றாண்டுகள் பழமையான இக்கோவிலில் இந்த ஆண்டு திருப்பணிகள் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

